Laughter born of tears

VADAKKE KOOTTALA NARAYAN NAIR, popularly known as VKN in Malayalam, who died on January 25, 2002 belongs to the genus of writers that turns up not often in any language. He had an exceptional capacity, in Koodiyattam parlance, eakalochanam, of expressing diverse emotions all at once; that is to say, laughter in one eye and tears of extreme grief in the other. Also, he familiarised, with a Thullal performer's flair, what appeared far-off in time and space by presenting them as if they were habitually in the immediate neighbourhood. A cultural coincidence, it might be, that VKN was also born, raised and spent the major part of his life in the same environs by the Bharathapuzha in the district of Palakkad where the Koodiyattam exponent, late Mani Madhava Chakkyar and Kalakkath Kunjan Nambiar, whose innovative improvisation on the old Chakkyarkoothu resulted in the powerful art form of Thullal, were born.
VKN's entry into Malayalam literature was in 1950s. Like for many others, his first love had been poetry. Though, before long, he gave it up, he kept up this adolescent infatuation all through his life. And he could quote from the Megasandesha or the Ramayanamchambu as quickly and effortlessly as he could from a new generation poet. This textual proficiency did not confine to poetry or literature alone. It was generic. Anything from under the sun, from contemporary politics to primitive occultism, from modern astrophysics to Chanakyas's Arthasastra, or from Das Kapital to Kamasutra, was a narrative device for him, which he brought into play in his stories and novels.
It was in the 1960s that VKN came to prominence as a writer. But, by then he had left Kerala for New Delhi, where he spent about 10 years as a journalist. The New Delhi of the 1960s had a defining role in modern Malayalam literature. It was the group of young writers who happened to come together on various professional engagements in the country's capital that made Malayalam literature, fiction in particular, what it is today.
Prominent among whom were O.V. Vijayan, M. Mukundan, George Varghese Kakkanadan and M.P. Narayana Pillai. VKN "landed" in this circle. These writers used to meet regularly to thrash out literature, politics or whatever else was the topic of the day — a preparation that capacitated them to accomplish new heights in writing.
As might be expected, VKN became an unfailing member of that collective. Those interactions, evidently, helped him be conversant with the latest developments in literature and consummate his style that is full of vim and vigour. Also, it could be that it was from those gatherings that he picked out many of his prototypical characters, especially the quick-witted, but hard-up "hero", Payyan (The Guy) of his seminal work, Payyankadhakal (The Stories of Payyan), who made inroads into the higher echelons of power and wealth using nothing but his sharp intelligence and winning demeanour.
The Delhi life in 1960s had significantly contributed to framing VKN's social outlook as well. The institutionalisation of unscrupulous political manipulations, power brokerage, corruption and the murky dealings in the corridors of power; all that to which he became a silent, nonetheless alert, head-on witness deepened his distrust of the entire social and political order. And, what he did was to make them materials for a laugh that begot another laugh, which finally spread across our body, mind and intellect. For that reason, he was labelled "humorist".
VKN's important works are Pithamahan (The Great Grandfather), Arohanam, which literally means "The Ascend" but "Bovine Bugles" in the author's own translation, Adhikaram (The Power), Payyankadhakal (The Stories of Payyan), Sir Chathuleecock, Kavi (The Saffron), Chathans, and Chitrakeralam (Kerala Pictures). "Humour", in none of these works, did mean just a laugh. Certainly, he made use of all that is available in the repertoire of humour: irony, satire, parody and burlesque. But, be it about the misuse of power, the abuse of female body, the libertinism of the affluent, or about the fate of the poor of the day; his narration was historically and politically many-voiced. Nothing escaped his keen-eyed scrutiny by which he puzzled readers as to how they should take it; laugh, cry or get agitated. His humour, in substance, was a lamentation on human fallacies. And, just like that, a resistance to authoritarianism of all sorts. He dispassionately chronicled the transition of society from one phase to another. And "laughed" because, like his favourite character Payyan, "he could not cry".
- THACHOM POYIL RAJEEVAN

Saturday, May 10, 2008

பையன் கதைகள்

பையன் கதைகள்
மலையாளத்தில் : வி.கெ.என்.
தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா

(மலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்று கருதப்படுபவர் வி.கெ.என். 2004 இல் காலமான இவருடைய பையன் கதைகள் தொகுப்பு 1980 இல் மத்திய சாகித்ய அகாடமி விருது வாங்கியது. இந்த தொகுப்பிலிருந்து 40 கதைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கதையாக பதிவேற்றம் செய்யப்படும்.)

1. கர்னல்
அக்காலம் பையன் டிஃபன்ஸ் காலனியில் வசித்து யமுனையில் குளித்து ஹவுஸ்காஸில் சம்போகித்து வந்தான். ஃபர்ஸ்ட் க்ளாஸ் காலம். ஒண்ணும் பிரச்னையேயில்ல. டிஃபன்ஸ் காலனின்னு சொன்னாலே ஒரு பந்தாதான். தலைநகரத்தின் மிக மேன்மையான வசிப்பிடமென்றும் மிகவும் அழகான வேசிகளின் கூடாரமென்றும் சௌந்தர்ய ஆராதனையின் தைமூர்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகிற இடம் அது. உங்களுக்கு டிஃபன்ஸ் காலனி முகவரியிருந்தால் நகரத்தின் ஃபுல்குடிமகன் ஆகிவிட்டீர்கள் என்றும் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டீர்கள் என்றும் அர்த்தம். ரொம்ப சீக்கிரம் நுழைந்தவர்களில் பையனும் ஒருவன்.
டச்சு பாணியில் கட்டப்பட்டிருந்த ஒன்றரை மாடிக் கட்டிடத்தின் அரைமாடியில் தான் பையன்பட்சி கூடுகட்டியிருந்தான். அரைமாடி என்றால் ஒரு மாடிக் கட்டிடத்தின் மேலிருக்கும் ஒற்றைஅறை என்பது பதவுரை. அறையைச் சுற்றிலும் சிமென்ட் போட்ட விசாலமான தளம். வேனில்காலத்தில் பரமசுகம். சிமென்ட் வெந்து பழுத்து, விடாமல் அனலடிக்கும். அறைக்குள் விசிறிக்குக் கீழே உட்கார்ந்தாலும் படுத்தாலும் கம்பளி போர்த்தி அடுப்புக்கனலில் குந்தியிருப்பதுபோலத்தான் இருக்கும். எழுந்திருக்கவே தோன்றாது. யமுனையைத் தவிர தேசத்திலெங்கும் தண்ணீர் பிரச்னையேயில்லை. கூதிர்காலத்தில் இதைவிட சுகம். பகலும் இரவும் வஜ்ஜிரத்தின் குளிரூசிமுனையில் சுகசயனம் செய்வதைப் போலிருக்கும். பீஷ்மபிதாமகனைக் கண்ணெதிரில் பார்க்கலாம். இருபத்துநாலுமணி நேரமும் ஐஸ் போட்ட தண்ணீர் பைப்பை அடைத்தாலும் தாரையாய் பிரவாகித்துக் கொண்டிருக்கும்.
இத்தனை வசதிகளிருக்கும் வீட்டுக்கு முப்பது நாளுக்கொருமுறை நூற்றியிருபது ரூபாய் வாடகை மட்டுமே பையன் கொடுத்துவந்தான். தண்ணீரும் மின்சாரமும் தனி. எல்லாம் முதலிலேயே கொடுத்துவிட வேண்டும். லாபம்தானென்று சொல்கிறான் பையன். மரங்களுக்குக் கீழே வசித்து டிஃபன்ஸ் காலனியின் வீட்டுரிமையாளர்களுக்கு இதை விட வாடகையை வெறுமனே கொடுக்கிற எத்தனையோ பேரை அவனுக்குத் தெரியுமாம். அதைப் பார்க்கையில் லாபம்தானே.
சர்வீசிலிருந்து விலகி வீடுகட்டி வீரசொர்க்கம் பூண்ட ஒரு மேஜருடைய மாளிகை இது. முதல் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் அவர் போர் புரிந்திருக்கிறார். ரொம்மலுடன் போரிட முடியவில்லையே என்பதாயிருந்தது இறக்கும்வரை இருந்த ஒரே துக்கம். இப்போது ரொம்மலிடமே தன் துக்கத்தைச் சொல்லித் தீர்த்திருப்பார் என்று சொல்கிறான் பையன். பையனுக்கு முகவரியைக் கொடுக்கையில் அவர் உயிரோடுதானிருந்தார். பிறகு திடீரென இறந்துவிட்டார். ஆனாலும் கடைசி நிமிடம் வரைக்கும் மரணத்தை இழுத்துக்கொண்டு போன பிடிவாத குணத்துக்காரர் அந்த மேஜர் என்பது பையனின் கருத்து.
எதார்த்த வாழ்க்கையில் சுடலைபத்ரகாளியாகவும் நடிப்பில் மேஜரின் மனைவியாகவும் இருந்த ஒரு பெண்மணிதான் எல்லா முதல்தேதியும் வந்து வாடகை வசூலித்துக்கொண்டிருந்தாள். ஒருமுறைகூட தவறாமல் வந்துகொண்டிருந்ததால் ஒருமுறைகூட தவறாமல் வாடகை கொடுக்கவேண்டியதாயிற்று பையனுக்கு. ஒரு மாதமாவது கொடுக்காமல் அந்த அமௌண்ட்டுக்கு இரண்டு நேரமும் உணவருந்த வேண்டும் என்று பையன் பலமுறைஆசைப்பட்டிருக்கிறான். வெகு காலத்துக்கு எதுவும் நடக்கவில்லை.
அப்படியிருக்கையில் ஒருநாள் கீழே முழுவீட்டில் நன்றாய் உண்டு வசித்து வந்த பெங்காலியும் அவர் குடும்பமும் ஒரு அந்தி நேரத்தில் பெட்டிபடுக்கையோடு தெருவில் இறங்கிப் போவதைப் பையன் பார்த்தான். பிறகு இரண்டு மாத காலம் வீடு காலியாய் விறைத்துப்போய் நின்றது. சரியான ஆள் கிடைக்கவில்லையென்று மேஜரின் விதவை, பையனிடம் சொன்னாள். ஐநூறு ரூபாய் தரும் யோக்யதையிருக்கிறமேல்தட்டு வாழ்க்கை வாழ்கிறவர்கள் வரும்வரை வீடு ஓய்வெடுத்துக்கொள்ளட்டும் என்பதாக இருந்தது காளியின் கணக்கு.
இரண்டுமாதங்கள் கழிந்து ஒருநாள் காலையில் பையன் எழுந்தபோது கீழே வீட்டைச் சுற்றி ராணுவ நடவடிக்கைகள் நடப்பதைப் பார்த்தான். ஒரு ராணுவ லாரியிலிருந்து வீரர்கள் சாமான்களை இறக்குகிறார்கள். ஆகாயத்தை நோக்கி மெஷின்கன் பொழிகிறார்கள். வடக்கன்பாட்டு பாடுகிறார்கள். சுழன்று சுவடு வைத்து வாள்வீசுகிறார்கள். பையன் ரகசியமாய் விசாரித்ததில் ஒரு கர்னல்தான் கீழ்வீட்டுக்குக் குடிவந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஒன்பது மணியளவில் மூக்குப் பிடிக்க ஜலபானம் செய்துவிட்டு பணியிடத்துக்குச் செல்கையில் அடக்கமுடியாத ஒரு பாதுகாப்புணர்வை அனுபவித்தான் பையன். யுத்தம் வந்தால் கீழே கர்னல் இருக்கிறாரே.
வேலை முடிந்து ஜகத்துக்கே உற்சவத்தை அறிவித்துவிட்டு பறந்து கூடடையும்போது பையன் கீழ்த்தளத்தில் வெளிச்சம் கண்டான். ஒரு சீமைநாயின் குரைப்பைக் கேட்டான். பயங்கரமான ஒரு பெண்குரலையும் கேட்டான். கர்னலின் தர்மபத்தினியாயிருக்கும். யுத்தத்திலும் சமாதானத்திலும் கணவனுக்கு சக்தியளிக்கும் ஏகாதசி நோன்புக்காரி. லாரியும் மெஷின்கன்னும் மறைந்துவிட்டிருந்தன. அடுத்த நாள் காலையில் கர்னலை சந்தித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து மீண்டும் சுபிட்சமாக ஜலபானம் செய்து கம்பளி போர்த்தி கனலடுப்பில் உறங்கினான் பையன்.
எட்டு மணியானபோது பையன் ஜலபானம் செய்து உடை உடுத்துக் கீழே இறங்கினான். செயற்கை மார்பிள் கல் பதித்த வராந்தாவில் நடந்து காலிங்பெல் அழுத்தினான். யூனிபார்ம் போட்ட ஒரு வேலைக்காரன் கதவு திறந்தான். கை இரண்டையும் தூக்கி சரணடைந்துவிட்டதாகக் காட்டி பையன் கர்னல்சாப் இருக்கிறாரா என்று கேட்டான். போய்விட்டார் என்று வேலைக்காரன் சொன்னான். அறிக்கையை உறுதிசெய்யும்விதமாக உள்ளேயிருந்து முதல்நாளிரவு குரைத்த சீமைநாய் இரண்டு முறைகுரைத்தது. கையைக் கீழிறக்கி பையன் திரும்பி நடந்தான்.
மாலையில் திரும்பிவந்து பையன் காதைத் தீட்டிக்கொண்டு படுத்தான். பயங்கரமான பெண்குரலும் சீமைநாயின் குரலும் மட்டுமே கேட்டது. அந்தப்பிரதேசத்திலேயே எங்கும் ஆண்குரலே இல்லை. இது என்ன கர்னல்டா இவன்? பையன் தனக்குள் சொன்னான். இருபத்து நாலு மணி நேரமும் யுத்தம் செய்கிற ஒரு வித்துவான். சரி, நாளைக்குக் காலையில போய் அவனைப் பிடிச்சுக்கலாம்.
அடுத்த நாள் காலையில் மணியடித்தபோதும் வேலைக்காரன் முந்தின நாள் கதையையே சொல்கிறான். கர்னல் போய்விட்டார். ஓஹோ, வித்தியாசமான ஒரு ஜாதிப் பறவைதான் இந்தக் கர்னல், பையன் நினைத்துக்கொண்டான். சுற்றுவட்டாரப் பறவைகள் துயிலெழுந்து, பாடுவதற்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் முன்பாகவே பறந்துபோகிற ஒரு பறவை. சுற்றுவட்டாரப் பறவைகள் உறங்கிய பின்னர் மட்டுமே கூடடைகிறபறவை. அப்படியானால், கர்னலின் தர்மபத்தினிக்குத்தான் நாளின் பெரும்பான்மையான பகுதியும் வீட்டின் கமான்ட் என்றாகிறது. இன்னும் ஒரு அடி மார்ச் செய்து சொன்னால், பையன் நினைத்துக்கொண்டான்: கர்னலுக்குத் தன் சொந்த வீட்டில் பெரிய கமான்ட் ஒன்றும் கிடையாது. பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தலைவரும் தர்மபத்தினியும் தங்களுடைய கமான்டுகளை எல்லை பிரித்து வைத்தமாதிரிதான். தலைவருக்கு ரெஜிமென்ட். தலைவிக்கு வீடு. போடா மயிரு என்று சொல்லி ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தபடி பையன் நடந்தான்.
ஆனாலும் வெப்பமானியின் பாதரசம் போல எரிச்சலும் பிடிவாதமும் பையனின் மனதில் ஏறிக்கொண்டன. உயிரோட இருந்தா, நாளைக்குக் கர்னலைப் பிடிச்சாகணும். பார்த்துடலாமே, எப்படிப்பட்ட ஆள்னு. இவ்வளவு நேரத்திலேயே போகிறஒரு கிளி உண்டா? அப்படி இருந்தா அதைக் கூட்டில வச்சே பிடிச்சாகணும். நாளைக்குக் காலைல ஏழு மணிக்கே கீழ இறங்கி மணியடிச்சு உள்ளே நுழையப் போறேன்.
பகல்போய் இரவு வந்தது. இரவு முக்காலும் போனது. புலர்காலமானபோது உடை அணிந்து பையன் டெரஸ்ஸில் பம்மியிருந்தான். ஒரு வேளை ஏழுக்கு முன்னாலேயே கிளி போவதாயிருந்தால் பிடிக்கும் விதத்தில். ஏழானது. கிளி கீழேதானிருக்கிறது என்பது உறுதியானதும், ஏழு முடிந்து ஒரு நிமிடத்தில் பையன் ஆபரேஷனை ஆரம்பித்தான். கீழேயிறங்கி வராந்தாவை வலம் வந்து மணியடித்தான். சேவகன் கதவைத் திறந்தான். அவன் வசனமேதும் சொல்லத் துவங்கும் முன்பாகவே பையன் உள்ளே நுழைந்தான். சேவகன் சடுதியில் உள்ளே விரைந்தான். என்ன வேணும்னாலும் போய்ச் சொல்லு, பையன் சொல்லிக்கொண்டான். கர்னலைப் பார்க்காமல் ஒரு அடி பின்வாங்க மாட்டேன்.
வரவேற்பறையில் பையன் காலூன்றி நின்றான். சுற்றிலும் பசுமையா யிருந்தது. பச்சை நிறத்தில் சுவர், அதே நிறத்தில் சோஃபா, தரைவிரிப்பு, கர்ட்டன், பூச்செண்டு, ரெஃப்ரிஜிரேட்டர் இன்னும் பல. எல்லாம் ஒன்றுக்கொன்று மேட்ச்சாய் இருந்தது. மேட்ச் செய்தது போதவில்லை என்று தோன்றும் இடங்களில் மேட்ச் பாக்சுகள் அடுக்கப்பட்டிருந்தன.
சோஃபாவுக் கீழே குனிந்து, குரைக்கும் சீமை நாய்கள் கடிக்கத் தயாராக பச்சை நிறத்தில் இருக்கின்றதா என்று பையன் பார்த்தான். ப்ளீஸ் டேக் யுவர் சீட், பையன் சொல்லிக்கொண்டான்: இங்கே ஃபார்மாலிட்டி எதுவும் கிடையாது. உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ.
சோஃபாவுக்குள் தாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் பயங்கரப் பெண் குரல் கேட்டது:
யெஸ்.
பையன் பார்த்தான். பச்சை நிறக் கதவருகில், பச்சைக் கர்ட்டனை விலக்கி, பச்சை சாரியும் கையில்லா பச்சை சோளியும் அணிந்து, பச்சை லிப்ஸ்டிக் போட்டு, பச்சை நிறமான ஒரு பேரிளம்பெண் தடித்துக் கொழுத்து தளும்பி நின்றுகொண்டிருக்கிறாள். எல்லைப் போரில் முழுசாய் தோற்றுவிட்ட சேலையும் சோளியும் அவளுடைய மத்திய பாகத்திலும் தோள் ஓரத்திலும் கசங்கிப் போய்க் கிடந்தன. கர்னலின் மனைவி!
வெளிப்படையான இந்தத் தூண்டுதலுக்கு எதிர்நின்று பையன் நினைத்துக்கொண்டான்: பையா. நீ அட்டகாசமான ஒரு காளைக்குட்டிதான். உன் வாலை நீ சுருட்டி வைத்துக்கொள்.
பையன் இவ்வாறு சொன்னான்: மேலதான் தொழுவம். கர்னல் சாரைப் பார்க்கலாம்னு வந்தேன்.
அவள் சிரித்தாள்: உட்காருங்க.
சோஃபாவின் ஒரு ஓரத்தில் அவளும் உட்கார்ந்தாள். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பூகம்பம் அடங்கியவுடன் அவள் கேட்டாள்: எப்படியிருக்கு இடம்?
பரவாயில்லை, பையன் சொன்னான்: ஒரு ரூம்தான் இருக்கு. கல்யாணமாகாததால அப்படியே போகுது.
ஓஹோ அவள் உரக்கச் சிரித்தாள்: நான் இந்த இடத்தைக் கேட்டேன்.
இந்த என்பதிலிருந்த அழுத்தம் பையனை உலுக்கிவிட்டது.
உனக்கு இது வேணும், பையன் சொல்லிக்கொண்டான், உன்னோட இடத்தைப்பத்தி யாராவது கேப்பாங்கன்னு நெனச்சே பாரு உனக்கு இது வேணும்.
ரொம்ப நல்ல வீடு, பையன் சொன்னான்: அருமையா இருக்கு.
சொன்னது சரியல்ல என்று பையனுக்குத் தெரிந்திருந்தது. இனி என்ன செய்ய முடியும், சொல்லிவிட்ட நிலையில்!
ஒருவேளை கர்னலின் மனைவி தான் சொன்னதை எழுதி வாங்கிக்கொள்வாள் என்று பையன் நினைத்தான். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. தோட்டக்காரன் வேலை செய்திருந்த முற்றத்தைக் கண்ணாடி ஜன்னலினூடே சுட்டிக்காட்டியபடி அவள் சொன்னாள்:
நான் வந்தபோது முற்றத்தைப் பார்க்க சகிக்கலை. வேணும்னா பார்த்துக்குங்க. ஒரு மாசத்துக்குள்ளே அங்க முழுக்க ரோஜாப்பூக்களாயிருக்கும்.
அழகாயிருக்கும், எதிர்காலத்தில் மலரப் போகிறமலர்களை மனதில் கண்டு பையன் சொன்னான். நினைக்கவும் செய்தான்: நூறு மலர்கள் மலரட்டும், நூறு கர்னல்கள் தங்களுக்குள் வாள்வீசிக் கொள்ளட்டும்!
முதல் கேள்வியைத் தப்பாய்ப் புரிந்துகொண்டதால் தன் பதில் தவறாகிவிட்டது, பையன் நினைத்துக்கொண்டான். இனி என்ன பேச? யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது கூந்தலிலிருந்து வீழ்ந்துவிட்ட ஒரு ஹேர்பின்னை எடுப்பதற்காக அவள் குனிந்தாள். அப்போது கழுத்திலிருந்து காதங்கள் கீழே உன்னதமான எல்லைப் பிரதேசங்களைத் தடுக்க முடியாமல் தடுத்து நிறுத்தியிருந்த அவளுடைய சோளியின் தடைகள் கலையவும் மீட்டர் கணக்கில் சொத்து விவரக் கணக்குகள் பேரலைகளாய் உயர்ந்து பிளக்கவும் செய்தன. உத்தண்ட சாஸ்திரிகளுக்குப் பிறகு தோன்றிய மஹாஸ்த்ரீரசிகனான பையன் கண்கள் விரியப் பார்த்தான். எழுந்திரிக்கலாமா? அப்புறம்?
பையா பையா பையா! பையன் சொல்லிக்கொண்டான்: மெதுவா போ. வண்டிய கியர்ல போடு. முன்னால இருக்கறது பெரிய வளைவு!
கர்னல் வந்துட்டார்னா, பையன் நினைத்தான்: எல்லாம் போச்சு! வந்துடாதேடா கர்னல்!
அறையின் ஒரு மூலைக்குச் சென்று பச்சை முக்காலியிலிருந்த புத்தனின் சிலையைக் காட்டி பையன் சொன்னான்: அழகான சிலை. இவ்ளோ சமத்தான புத்தனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை.
அவளுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. சேலையில் பொதிந்த ஒரு காலை அநாயாசமாக மறுகாலின்மேல் ஏற்றிவைத்து கையிரண்டையும் தலைக்குப் பின்னால் கோர்த்து சிரித்தவாறு அவள் சொன்னாள்:
அதை நான் வாங்டாக்கில வாங்கினேன்.
தான் பூமியை விட்டு நழுவுவதாகத் தோன்றியது பையனுக்கு. ஆனந்தவல்லி, தடியழகி, திம்மி, லூசுப் பாருக்குட்டி, பஞ்ச கல்யாணி, அதே போஸில், தான் மரிக்கும்வரைக்கும் இருக்கட்டும் என்று பையன் ஏங்கினான். அவள் அப்படி உட்கார்ந்திருக்கும்போது எல்லா எல்லைக்கோடுகளும் மறைந்துவிடுகின்றன. அலைகள் பின்னோக்கி அடிக்கின்றன. உன்னதமான ஆழங்களுடைய, பிரம்மாண்டமான புதையல்களைக் கொண்ட, உழுது பிளந்த மண்ணின் மணம் எழுகிற பூமிதேவி கஜம்கஜமாய் அலங்கோலமாய்க் கிடக்கிறாள். பையனின் போதம் ஒரு குடிகாரனைப் போலானது.
கர்னல் வந்துடக் கூடாதே! பையன் மீண்டும் நினைத்துக் கொண்டான். வந்தா அவனைக் கொன்னுடுவேன்.
அவளுடைய லைன் புரிந்துவிட்ட பிறகு ஒரு நிமிஷம்கூட வீணாக்காமல் பையன் தொடர்ந்து சொன்னான்:
ரேடியோகிராம் ரொம்பப் புதுமாடல் போலிருக்கே. இந்த மாடலை நான் முன்னே பார்த்ததில்லை.
ஆனந்தவல்லிக்குப் பரமசந்தோஷமாகி விட்டது. அந்த நிமிடமே அவள் பாய்ந்து தன்னை எதுவும் செய்யாமலிருந்தது தன்னுடைய துரதிர்ஷ்டம் என்று சொல்கிறான் பையன்.
காஸாவிலிருந்து ஒரு நண்பர் கொண்டு வந்தார்.
ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ளும் சுகத்துடன் அவள் சொன்னாள்.
பையன் தன்னுடைய மிக நேர்த்தியான அப்பாவித்தனத்தை முகத்தில் நிறைத்துக்கொண்டு, முன்னால் சாய்ந்து உட்கார்ந்து அவளுடைய கண்களுக்குள் பார்த்தபடி கேட்டான்:
க்யூரியோஸ் நிறைய இருக்கு போலிருக்கே?
லூசுப் பாருக்குட்டி உருகிப் போனதாய்த் தோன்றியது பையனுக்கு.
அவள் சொன்னாள்: ஒரு புதிய டேப்ரிக்கார்டர் இருக்கு. காமிக்கட்டுமா?
அவள் எழுந்தாள்.
அந்த நேரத்தில்தான் சேவகன் தோன்றிக் கேட்கிறான்: டிபன் வெக்கட்டுமா?
செத்தால் போதுமென்றாகிவிட்டது பையனுக்கு. இப்போது கர்னல் வந்துவிடுவார். அவருடன் உட்கார்ந்து அவள் சாப்பிடுவாள். என்னால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ம்... போகிறேன். இன்னொரு நாள்...
ரொம்ப சந்தோஷங்க. கண்களில் துக்கத்துடன் பையன் சொன்னான். இன்னொரு நாள் வரேன். கர்னல் சாஹிபை அப்போ பாக்கலாம். பை!
கர்னல் சாஹிபைப் பாக்கணுமா? திம்மியின் கண்களில் பிரகாசம் படர்ந்தது:
வாங்க!
அவள் குறுக்கே நடந்து வராந்தாக் கதவைத் திறந்தாள். நடக்கையில் பஞ்சகல்யாணி குலுங்கவும் குலுங்கிச் சிரிக்கவும் செய்தாள். அவளுடைய பாகங்கள் தளும்பித் தெறித்து வீழந்துவிடுமென்று தோன்றியது பையனுக்கு. தெறித்து வீழந்தால், பையன் நினைத்துக் கொண்டான்: நான் அவற்றை வாரியெடுத்துக் கொண்டு ஓடிவிடுவேன். எப்போதும் திருப்பிக் கொடுக்க மாட்டேன்! என்னமோ, கர்னலைப் பற்றி இப்போ சொல்லியிருக்க வேண்டாம். எல்லாம் நாசமாப் போச்சு!
வராந்தாவில் காலிங் பெல்லுக்கு எதிராக கதவின் ஒரு பக்கத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சின்ன போர்டைக் காட்டி அவள் சொன்னாள்:
ப்ளீஸ் மீட் தி கர்னல்.
பையன் போர்டிலிருந்த இதிகாசத்தை மனதுக்குள் வாசித்தான்:
லெப். கர்னல். (மிஸ்) ரேணு, எம்.டி.
தன் காலடிக்குக் கீழே பூமி வழுக்கிப் போவதைப் போல் தோன்றியது பையனுக்கு. மீண்டும் கண்களில் நிஷ்களங்கத்தைக் குழைத்து அவளை வணங்கி நிற்கும்போது, சுந்தரிக்குட்டி உள்ளே பார்த்து இவ்வாறு சொல்வதை பையன் கேட்டான்:
டிஃபன் ரெண்டு பேருக்கு வை.
அன்று முதல் பிறகு எல்லாமே சுகம்தானென்று சொல்கிறான் பையன். இரண்டு நேரம் தேய்த்துக் குளியல், மூன்று நேரம் சாப்பாடு, புல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கோழிமுட்டை, ஆட்டுப்பால், மாத்திரை, தங்கபஸ்பம், உயிரோடு காட்டுப்போத்தின் இறைச்சி. என்னன்னா, பையன் சொல்கிறான், அதுக்குப் பிறகு ஹவுஸ்காஸுக்கு போகலைன்னு அர்த்தம்.





2. பிரம்ம முகூர்த்தம்
தடித்து மினுங்கிக் கொண்டிருக்கும் கம்பளிப் போர்வையின் அடியினூடே சர்வாங்கமும் தளர்ந்து உறங்குகிற ரேணுவின் தலையைத் தடவியபடி படுத்துக்கிடந்தான் பையன். நிறைந்து வழிகின்ற ஒரு சிறு அருவி பையனின் நினைவில் வந்தது. அல்லது வளைந்து ஓடுகின்ற ஒரு நதி. நதியைத் தொட்டு நடக்கையில் பையன் நினைத்தான்: மினுக்கும் பாறைக்கூட்டங்கள், பட்டுப் போன்றமணற்கரைகள், முழு வட்டமான சுழி, சாந்துப் பொட்டுப் போல நீண்டு நிறைந்த புல்முனை. அதையும் தாண்டி இரண்டு பிரிவாக நதி ஓடுகிறது. துளித்துளியாய், ததும்பித் ததும்பி தாளத்துடன் ஓடுகிறது. என்ன ஒரு நதி, பையன் நினைத்துக் கொண்டான்: என்ன ஒரு அழகிய, அழகிய நதி!
நதியின் மத்தியில் கைவிட்டு கட்டிப்பிடித்து பையன் அவளோடு சேர்ந்து சேர்ந்து படுத்தான். பல்லை இறுக்கி முணுமுணுத்தான்: மாபெரும் அழகே, என்னோட பெண் கர்னலே, பேராறே, பெரியாறே, உன் மேலேயும் அடியிலும் சுக்கான் வீசி விட்டேற்றியாய் நகர்கிறஒரு சிறு தோணியாகிறேன் நான், உன்னோட செல்லப் பையன்.
வெளியே, டெல்லியின் டிஃபன்ஸ் காலனியில் குளிர் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே பூந்தோட்டமும் பாதையும், செத்து ஒளிர்கின்றவழிவிளக்கில் கடுங்குளிரை நக்கி விறைத்து நின்றன. போர்வைக்குள்ளிருந்து கையை வெளியே எடுத்தால் குளிர் கொத்தும் என்று தோன்றியது. ஆயிரம் தலைகளும் அதன் இரண்டு மடங்கு விஷப்பற்களும் கொண்டு, அடைத்துப் பூட்டிய படுக்கையறைதவிர எல்லா திசையிலும் குளிர் எனும் மகாமூர்க்க நாகம் பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பையனுக்கு. அறையின் மூலையில், நீண்ட ஒரு நிலக்கரித்தீக்குச்சி போல கிடந்து எரியும் எலக்ட்ரிக் ஹீட்டர்தான் விடியும் வரையாவது கொடுங்குளிரைத் தடுத்து நிறுத்துவது. சுற்றிலும், மேலேயும், எங்கும் குளிரின் வெள்ளப்பெருக்குதான். பையன் நினைத்துக் கொண்டான், எங்கேனும் ஒரு துளை திறந்தால் போதும், குளிர் அலையடித்து அறைநிரம்ப. அப்போது பஞ்சபூதங்களும் நுழைந்து நானும் ரேணுவும் இறந்துபோய்த்தான் காலையில் கண்விழிப்போம். ஆனால், ரேணுவைக் கட்டிப்பிடித்தபடி மெல்ல மெல்ல மரிப்பது என்பது ஒரு மகாமரணமாயிருக்கும், பையன் நினைத்துக் கொண்டான். புனர்ஜென்மம் இல்லாத மரணம். எல்லா புடுங்கல்களுக்கும் முடிவு. கடைசி சாந்தி. ஒரு நாள் நான் அதையும் அடைந்துவிடுவேன், பையன் நினைத்தான். வரட்டும், இந்த வேலைப்பளுவெல்லாம் கொஞ்சம் குறையட்டும், ஒரு சுக மரணமாவது அடைந்து பார்க்கணும்.
ஆனால் வேறேதும் சிந்திப்பதற்கு இல்லாததால் பையன் மேலும் சிந்தித்தான், சுகமரணப் புரவலனான இந்தக் குளிருக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. என்னவென்றால், லௌகீக விஷயங்களுக்கு விடை கொடுத்து, குளித்து நீறு பூசி ஈசுவர சிந்தனையில் ஈடுபட வேண்டிய நேரமிது, நான் விழித்து நதியில் ஊறிக் கிடக்கும் இந்த நாலாம் யாமம், பிரம்ம முகூர்த்தம். கொடுங்குளிர் அதற்குத் தடையாக இருக்கிறது. யாருடைய கழுத்தில் அன்றைய கத்தியை வைக்கலாம் எனும் நீண்ட ஆலோசனையை நிம்மதியாய்ச் செய்ய வேண்டிய மனிதனை இந்தக் குளிர் படுத்துக் கொண்டு செய்யும் பாவ காரியங்களைச் செய்ய இடைவிடாமல் தூண்டிக்கொண்டிருக்கிறது. மீக்குளிர் தேசங்களில் தர்மம் நசிப்பதில் ஆச்சரியமில்லைதான், பையன் ஒரு சொற்பொழிவாளனைப் போல யோசித்தான். மித சீதோஷ்ண நிலை கொண்ட கேரளத்தைப் பாருங்கள். அங்கே தர்மத்தை இன்னும் சூது கவ்வவில்லை. அந்தி வரைக்கும் அந்தி முடிந்தபின்னும் என்னவெல்லாம் செய்தாலும் பிரம்ம முகூர்த்தத்தில் அங்கே மனிதர்கள் - ஆணும் பலதலைவாங்கிய பெண்ணும் - ஒருவர் விடாமல் பாவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாயை உதறி எழுந்து மூன்று முறைகுளிக்கிறார்கள், நீறு பூசிக் கொள்கிறார்கள், ஈசுவரனைப் புகழ்கிறார்கள், அமுதுண்ணுகிறார்கள், நிலையான ஒரு மந்திரிசபைக்காக 'இடம் வலம்' பார்க்காமல் ஓட்டுப்போடுகிறார்கள். அதனால்தான் அந்தக் குட்டி பூமிப்பகுதிக்கு சூரியன் எனும் இந்தப் பெரிய லோகத்தில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது.
கட்டிலுக்குப் பின்னால் ரகசியமாய் ஒளிவிடுகின்ற நீல வெளிச்சத்தில் பையன் தலையணைக்கடியிலிருந்து வாட்சை எடுத்து ரகசியமாய்ப் பார்த்தான். அஞ்சு மணிதான் ஆயிட்டிருக்கு. குளிர்தேசங்களில் சூரியன் பாவச்செயல்களை முடித்து பாய் மடக்கி எழுவது எட்டுமணிக்குத்தான். இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. இப்போது பிரம்மமுகூர்த்தம் நடந்துகொண்டிருக்கிறது. ரேணுவை எழுப்பலாமா? பையன் யோசித்தான்.
அப்புறம்? பையனின் ஜீவாத்மா கேட்டது.
குளிக்கணும். ஈசுவர சிந்தை இதொன்றே மனிதனு.... பரமாத்மா பாடியது.
அது முடியாது. வேறென்ன செய்ய?
ஜீவாத்மா நாடகப்பாணியில் மைக்கில் கேட்டது.
தொடர்ந்து விக்கிரக ஆராதனை செய். சுலபமான வேலைதானே, பையன் கடைசி வார்த்தையைச் சொன்னான்.
தடித்து மினுமினுக்கும் கம்பளியை அவளுடைய முகத்திலிருந்து விலக்கி பையன் ரேணுவைப் பார்த்தான். சுந்தரமாய் உறங்குகிறாள் ஆனந்தவல்லி. வைத்திய சாஸ்திரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவளுக்கு மட்டுமே சாத்தியமான விதத்தில் சீராக அவள் சுவாசத்தை நடத்திக்கொண்டிருக்கிறாள். இந்த சம்பவம் நடக்கும்போது உன்னதமான அவளின் மார் உயர்கிறது, தாழ்கிறது. நுரையில்லாமல் தாளத்தோடு எழும்பி விழும் ஒரு குட்டி அலைதான் பையனின் நினைவுக்கு வந்தது. பழுத்த பாக்கின் நிறமுள்ள அழகியின் கண்ணிமைகள் கூம்பிக் கிடக்கின்றன. உதடு கொஞ்சமாய் விரிந்து அதனூடே வெளுத்த ஒரு பல் தெரிகிறது. அதற்கு ஈடாக இருப்பது காதில் கிடந்து துடிக்கின்றஆபரணத்தின் வெளுத்த பெரிய கற்கள்தான். தலை வைத்த இடத்தில் வெள்ளைக் கவர் போட்ட டன்லப் தலையணை குழிந்திருந்தது. கழுத்து வரை வருகிறமுடி குழிக்கு சுற்றிலும் சிதறிக் கிடக்கிறது. மின்னுகின்ற கழுத்து நரம்புகள் பின்னிப் பிணைந்து உறங்கிக் கிடக்கின்றன.
ஈசுவர சிந்தனை பையனின் பரமாத்மாவை ஏறி மிதித்து பம்பையைக் கடந்து போனது. இன்னும் இன்னும் அவளோடு ஒட்டிப் படுத்து இனி இன்னும் ஒட்ட முடியாது என்றநிலை வந்தபோது பையன் அவளின் கழுத்தின் வெளுப்பில் உதடுகளால் மலர் ஒத்தடம் கொடுத்தான். ஒரு முறை. இன்னும் ஒரு முறை. பூ விரியும் வரை.
கர்னல் தலையை அசைத்துக் கண் திறந்தாள். முதலில் மெதுவாக. பிறகு பையனைப் பார்த்தவுடன் ஒரே அடியாய் முழுக்க.
சுப்ரபாதம் என்று சொல்லி பையன் அவளுடைய முடியில் விரலோட்டினான். ரேணு சிரித்தாள்.
எழுந்திருடீ ரேணு.
மணி எவ்ளோ?
அஞ்சு.
அதுக்குள்ள எழுந்திரிச்சிட்டியா? என்ன வியாதிடா இது?
ஆன்மீகம், பையன் சொன்னான். நாளையைப் பத்தின சிந்தனைகள் எனக்குள்ள உதிச்சிட்டிருக்கு.
மானசீகமா எதாவது நடக்கறதுக்குள்ள உன்னைத் தீவிரமா பரிசோதனை செய்யணும்.
தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் குளிச்சு நீறு பூசினா எனக்கு எந்தப் பரிசோதனையும் தேவையில்லை.
இந்த பிரம்மமுகூர்த்தம்கிறது என்ன சாமானம்?
நாலு மணியிலிருந்து சூர்யோதயம் வரைக்குமிருக்கிற பொழுது.
ஓஹோ.
என்ன ஓஹோ?
இவ்ளோ நாள் இந்த முகூர்த்தத்தில குளிக்காததனால உனக்கு எதுவும் நடந்துடலியே.
இல்லை. ஆனா இன்னிலிருந்து நடக்கப் போகுது.
என்ன நடக்கப் போகுதாம்?
நேரங்கெட்ட நேரத்தில பாவம் எனக்குள்ளே ஒரு இடத்தில அதனோட குரூரமான தலையை வெளியே நீட்டிடும்.
பையனை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ரேணு சொன்னாள்:
இதுக்குத்தான் இந்த முன்னுரையாடா?
நிறைந்து வழியும் அவளுடைய மார் தன் மாரில் நிறைந்து ததும்பி நின்றபோது தான் முழுக்கக் கரைந்துபோவதாகத் தோன்றியது பையனுக்கு. நதியில் கீழ்ப்படிந்து மூழ்கிக் கிடந்தபடி பையன் சொன்னான்:
முன்னுரையெல்லாமில்ல.
அப்படீன்னா?
கெட்ட சிந்தனை கிடையாதுன்னேன்.
அப்புறம்?
பழைய நினைவுகள்தான்.
பிம்மி பிம்மியைப் பத்தியா?
இல்ல.
அப்புறம்? கமான்.
கர்னல் பையனைப் பிடித்து ஆட்டினாள். தான் மூழ்கி இறந்துபோவதாகத் தோன்றியது பையனுக்கு.
கேரளாவைப் பத்தின நினைவுகள்தான். பையன் சொன்னான்.
அந்த நாசமாப் போன தேசத்தில நீ என்ன பண்ணிட்டிருந்தே?
கேரளாவில இருந்தபோது, பையன் சொன்னான்: நான் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில எழுந்திரிப்பேன். குளிப்பேன். நீறு பூசுவேன். கடவுளுக்கு ஆளனுப்புவேன்.
என் பிரியமான பையன் சன்னியாசியே, ரேணு கேட்டாள்:
யாரோட மறுஜென்மம்டா நீ?
அந்தக் கடமையை சரியா செஞ்சதனாலதான் நான் இந்த நிலைக்கு வந்திருக்கேன்.
அந்தக் கடமைக்கு ஒரு ஓ போட்டுட்டேன்.
இன்னிக்கும் கேரளாவில எல்லாரோட நிகழ்ச்சிகளும் பிரம்ம முகூர்த்தத்திலேயே ஆரம்பிக்குது. பையன் சொன்னான்.
உன்மத்தம் வந்து சாமியாடும்போதுதான்டா உனக்குள்ள ஆண்மை வருது, ரேணு சொன்னாள்.
நீ விஷயத்தை விட்டு விலகிப் போறே, பையன் சொன்னான்:
கேரளாவில வயசுக்கு வந்த எல்லாருமே பிரம்ம முகூர்த்தத்தில எழுந்து குளிச்சு நல்லது மட்டுமே நினைக்கிறாங்கன்னு சொன்னா நீ நம்பணும்.
அவங்க அப்படிச் செய்யணும்னுதான் நானும் ஆசைப்படறேன்.
அவங்க அப்படித்தான் செய்யறாங்க.
அப்படின்னா இந்த ஜனப்பெருக்கமும் பட்டினியும் அங்கிருந்து போயிருக்கணுமே.
இனிமே அது போயிடும்.
முகூர்த்தம்தான் காப்பாத்தணும், ரேணு சொன்னாள்.
ஒரு புராணமே இருக்கு பிரம்ம முகூர்த்தத்தைப் பத்தி, திடீரென நினைவுக்கு வந்து பையன் சொன்னான்: கேக்கறியா?
இன்ட்ரஸ்டிங்கா இருக்குமா?
இது ஒரு கிளாசிக். கேட்டா தினமும் நீ பிரம்ம முகூர்த்தத்தில எழுந்திடுவே.
போரடிக்காதுன்னா சொல்லு.
என் சிநேகிதன் அஸ்வகோசத்து அஷ்டமூர்த்தி நம்பூரிதான் இந்தப் புராணகர்த்தா, பையன் சொன்னான்.
யாரிந்த கேரக்டர்?
மகாபண்டிதன். தேஜஸ்வி. கவி. போகி. கேரளா முழுக்க அவருக்கு தொடுப்பு ஒண்ணு, ரெண்டு, மூணிருக்கு.
மூணோட ஏன் நிறுத்திட்டாரு?
மூணுக்கும் மேலான பேர்கிட்டயும் தன்கிட்டயும் நியாயமா இருக்க முடியாதுங்கற நியாயமான சிந்தனைதான்.
மானஸ்தன், ரேணு சொன்னாள்: சரி புராணத்தைச் சொல்லு.
திருவனந்தபுரத்திலயும் திருச்சூரிலயும் தலச்சேரியிலயும் நம்பூரிக்குத் தொடுப்பு. எத்தனை தொடுப்புங்கறது இல்ல, எத்தனை மணிக்குக் காலைல எழுந்திரிக்கறோம்கறதுதான் அவரைப் பொறுத்தவரைக்கும் முக்கியம். அதாவது, சொன்ன முகூர்த்தத்தில, நாலாம் யாமத்துல எழுந்திருவாரு. பாக்கி வேலையெல்லாம் அப்புறம்.
காலையில எழுந்திருக்கறதுக்கான வித்தைதான் தொடுப்புன்னு நம்பறாரு முட்டாள். இல்லியா, ரேணு கேட்டாள்.
ஓரளவுக்கு நீ சொல்றது சரிதான், பையன் சொன்னான்: ஆனா முட்டாள் இல்ல, நம்பூரி மகாபண்டிதனாக்கும்.
என்னவோ ஆகிட்டுப் போகட்டும், பாக்கியை சொல்லித் தொலை.
திருவனந்தபுரம் தொடுப்பை திறப்புவிழா பண்ணின அன்னிக்கு ராத்திரி நம்பூரி அவகிட்ட சொன்னாரு: ன்னா, பெரும்பிறந்நேல் பொன்னம்மா, ஒரு விஷயம். பிரம்ம முகூர்த்தத்தில நாலாம் யாமத்தில எழுப்பிரணும், ட்டியா?
அதுக்கென்ன? பொன்னம்மா சொன்னா: எழுப்பிடறேனே. திருமேனிஸ்ஸார் கவலைப்படாம தூங்குங்கோ.
நற்கர்மங்களுக்குப் பிறகு நம்பூரியும் பொன்னம்மாவும் தூங்கினாங்க.. அதிகாலையில பொன்னம்மா அவரை எழுப்பினா. நம்பூரி வெளியே இறங்கி நட்சத்திரம் பார்த்து பொன்னம்மாஸ்ஸாரிடம் சொன்னாரு:
ன்னா, துல்லியமா இருக்கு. நாலாம் யாமம்னா நாலாம் யாமமே. எப்படி தெரிஞ்சது பொன்னம்மா?
ஓ, இதிலென்ன இருக்கு?
பிறந்ததிலிருந்தே தொடுப்புள்ள ஆண்களை பிரம்ம முகூர்த்தத்தில் எழுப்பியவளைப் போல பொன்னம்மா சொன்னா:
நாலாம் யாமத்தோட ஆரம்பத்திலதானே தங்கம் சூடு தணிய ஆரம்பிக்குது. தாலியில இருக்கிற தங்கம் சூடு தணிஞ்சப்போ நான் எழுப்பிட்டேன்.
பொன்னம்மா பரவாயில்லியே, நம்பூரி சொன்னார்.
அடுத்த மாச ரவுண்டுக்குத் தயாராக இருக்கும்படி சொல்லி நம்பூரி திருச்சூருக்குப் பயணமானாரு.
சாயங்காலமா திருச்சூருக்குப் போய்ச் சேர்ந்தாரு. தேய்ச்சு குளிச்சு வடக்குந்நாதனைத் தொழுதாரு. பிரம்மஸ்வம் மடத்தில தொண்டை கிழிய பஜனை பண்ணி ஃபிட்டானாரு. நீட்டா வெத்தலை போட்டாரு. ராந்தலை எடுத்துக்கிட்டு பாப்பியம்மாளோட வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாரு.
பொழுதுபோக்கும் ஸ்பெஷல் திருச்சூர் வித்தைகளும் முடிஞ்சபிறகு ரெண்டாம் யாமத்துக் கடைசில நம்பூரி பாப்பியம்மாள்கிட்ட சொன்னாரு:
ன்னா, பாப்பியோட மேளம் அட்டகாசம். பிரம்ம முகூர்த்தத்தில எழுப்பிடணும், ட்டியா?
ஆகட்டும்னு சொன்னா பாப்பியம்மா.
அது மட்டுமில்ல, நாலாம் யாமம் தொடங்கும்போது நம்பூரியை எழுப்பவும் செய்தா. நம்பூரி வெளியே இறங்கி நட்சத்திர விசாரம் செய்தாரு. சரியா நாலாம் யாமம். பிரம்ம முகூர்த்தம்.
எப்படி முடிஞ்சது பாப்பி உன்னால? நம்பூரி கேட்டாரு.
என்னா முடிஞ்சதுங்கறீங்கா? பாப்பி கேட்டாள்.
நாலாம் யாமத்தை எப்டி இவ்ளோ துல்லியமா தெரிஞ்சுட்டே?
மூணாம் யாமத்திலா வௌக்கிலா எண்ணா ஊத்தினமா, பாப்பி சொன்னாள்: வௌக்கா அணஞ்சப்பா நானா எழுப்பிட்டேன்!
பாப்பியோட புத்தி அட்டகாசம் நம்பூரி பெருவிரலை அசைச்சிட்டே சொன்னாரு: ன்னா, மத்த ரெண்டு பேருக்கும் ஈடு கொடுக்கறவதான்.
திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வர்றவழியில அடுத்த மாசம் வரேன்னு சொல்லி, உதிரி பாகங்களையெல்லாம் துடைச்சு சுத்தமா வெக்கணும்னு சொல்லி நம்பூரி தலச்சேரிக்குப் புறப்பட்டாரு.
அஞ்சனக் கண்ணெழுதி, ஆலிலத் தாலி சார்த்தி, வயநாடன் மஞ்சள் தின்று, சாப்பாடன் புகலை சூடி, துளுநாடன் பட்டுடுத்து, கவிப்பேரரசு பி. பாஸ்கரன் வரிசைப்படுத்தின மத்த எல்லா டிரெஸ் கோடோட பைங்கிளி மாக்கம் காத்திருந்தா. நம்பூரியும் தாமதமில்லாம வந்து சேர்ந்தாரு.
கடத்தநாடன் களரிப் பயிற்சி முடிஞ்சு அர்த்தராத்திரியானபோது அஷ்டமூர்த்தி தூங்க ஆரம்பிச்சாரு. தூக்கத்துக்குள்ள மூழ்கிட்டிருந்தபோது நம்பூரி மாக்கத்துகிட்ட சொன்னாரு:
ன்னா, தூக்கத்திலயும் நம்மளை செண்டை அடிக்க வைக்கக்கூடாதுங்கறேன். நாலாம் யாமத்தில எழுப்பிணும். ட்டியா?
சரி பண்ணிரலாம்னா மாக்கம்.
சரி பண்ணவும் செஞ்சா. நம்பூரி எழுந்து சுத்தியும் ஆகாசத்தையும் பார்த்தாரு. நாலாம் யாமம்னா சரியான நாலாம் யாமம். இப்படியொரு நாலாம் யாமத்தைப் பாத்ததே இல்லை.
அதிசயம்தான் நம்பூரி சொன்னாரு. எப்டி தெரிஞ்சுண்டே மாக்கம் நாலாம் யாமம்னு?
மாக்கம் சொன்னாள்: ஊஸ்ஸ் எனக்கு ரெண்டுக்கு வந்தபோதுங்கோ.
ற்பத்தியாகுமிடத்திலிருந்து கடல் சேருமிடம் வரை ஓங்கியடித்த சிரிப்பின் பேரலையில் நதி ஆடிப்புரண்டது. ஒரு முறை புரண்டு உயர்ந்து விரிந்த இம்சை நிறைந்த பொன்குடங்களுக்கிடையே பையன் மூழ்கித் தவித்தான். ஒரு மழலையைப் போல அவனைத் தன்மேல் வாரிப் போட்டுக்கொண்டு ரேணு சொன்னாள்:
வா பையா.
அவன் அவளுக்குள் இறங்கிச் செல்கையில் இடறும் தொண்டையோடு கர்னல் கேட்டாள்:
என் பையா அந்த நம்பூரி நீதானேடா?




3. லஞ்ச்
ஒரு மணி ஆனபோது பசி அலாரத்தின் துல்லியத்துடன் பையனைப் பிடித்துக் கொண்டது. இந்தியன் ஸ்டேன்டேர்டு நேரம் ஒரு மணி முடிந்து ஐந்து நிமிடமானபோது சகித்துக் கொள்ள முடியவில்லை பையனால். துடித்துப் போவதாய்த் தோன்றியது. பையன் பாக்கெட்டிலிருந்த காசை எண்ணிப் பார்த்தான். ஒரு ரூபா எண்பத்தைஞ்சு காசிருக்கு. இன்றைய பொழுதுக்குத் தேவையான புத்தியின் கூர்மைக்கு அதியத்தியாவசியமான இரண்டு பெட்டி சார்மினார் சிகரெட்டின் விலை போக ஒரு ரூபா நாற்பது பைசா இருக்கிறது. மதராஸ் ஹோட்டலில் ஒரு சாப்பாடு ஒரு ரூபா இருபத்தைந்து பைசா ஆகிறது. சமீபத்தில்தான் விலையைக் கூட்டியிருக்கிறார்கள். அதற்கு முன்னால் ரொம்ப வருஷம் ஒரு சாப்பாடு ஒரு ரூபா என்கிறபொற்காலமிருந்ததாம். அப்ப, ஒரு சாப்பாட்டை மூக்கு முட்டப் பிடிச்சு, ரெண்டு பெட்டி சார்மினாரும் வாங்கினா பதினஞ்சு பைசாதான் மிஞ்சும். மாலையில் கூடடைய பஸ்ஸுக்கு முப்பது பைசா வேணும். கம்மியை எப்படி சரிபண்றது? பையன் யோசித்தான். சிகரெட்டை விடறதை விடு, சிகரெட்டைக் கம்மி பண்ணக்கூட முடியாது. தினசரி உணவுப்பழக்கத்தின் ஒரு பகுதியாகவே, தான் பிடிக்கிறசிகரெட் பிராண்டை பையன் கருதிவந்தான். சமீபகாலமாக உற்பத்தியாளர்கள் அதில் குருமிளகும் உப்பும் நிறைக்கிறார்கள் என்று பையன் சொல்கிறான். இழுக்கையில் காரத்தையும் புளிப்பையும் அனுபவிக்கலாமாம். நிறைய மோர் குடித்து தூமபானம் நடத்தினால் சிலபோது லஹரியும் சித்திக்குமாம். இத்தனை நன்மைகள் செய்பவனை உபயோகிக்காமல் விடுவதா? வேறெதாவது சொல்றா, பையன் நெற்றியைச் சுளித்தபடி பையனிடம் சொன்னான்.
மேனோனின் ஆப்பீசுக்குப் போனால் என்ன என்று யோசித்தான் பையன். புரட்சியை சிருஷ்டிக்கிற கட்சியின் தலைநகரத்து மெஸ்ஸிலிருந்து மேனோனுக்கு எடுப்பு சாப்பாடு வருகிறது. ஜமீன் ஆட்சிக்காலத்தின் விருந்துகளை நினைவுபடுத்தும் சாப்பாடு. மோர் ஊற்றின ஃபர்ஸ்ட் க்ளாஸ் குழம்பு. இளம் மஞ்சள் நிறத்தில் அட்டகாசமான அவியல். கருவேப்பிலையும் வாழைக்காயும் குறுக்கும் நெடுக்கும் கிடக்கிறஅற்புதமான கறி. நம்பர் ஒன் பொரியல். பச்சை மாங்காயை சின்னதாக சதுரமாக நறுக்கி மிளகும் உப்பும் பெருங்காயமும் கலந்து அன்றைக்கு உண்டாக்கின ஊறுகாய். உப்பிய அப்பளம். நல்ல மோர். ஒரு சாப்பாட்டை ரெண்டு பேர் முழுசாக சாப்பிடலாம். ஆனால் மேனோனின் சகவாசியான தாடி கோவிந்தன் சொல்கிறான், மேனோன் ஒரே மூச்சில் ரெண்டு பேர் மாதிரி இந்தச் சாப்பாட்டை விழுங்கிவிடுகிறாராம். ராத்திரி வீட்டுக்கும் இந்த எடுப்புச் சாப்பாடுதான் வருகிறதாம். அதில் முக்கால் பாகத்தை ராத்திரி முடித்துவிடுகிறார். மீதியை நீரூற்றி வைக்கிறார். காலையில் பழையது என்று சொல்லி மீண்டும் உண்கிறார். எப்போது நுழைந்தாலும் உண்ணும் நிலையிலேயே அவரை வீட்டில் பார்ப்பதாக தாடி சொல்கிறான். பட்டாளத்தைப் போல புரட்சியும் வயிற்றின் மீதுதான் மார்ச் செய்வதாகவும் சொல்கிறான் அவன்.
இருந்தாலும் வேறு வழியில்லாத நிலையில் ஒரு நேரம் போய் மேனோனை பட்டினி போடுவதில் தப்பில்லை, பையன் நினைத்துக் கொண்டான். ஆக்ஸ்போர்டு ஆக்சென்ட்டோடு இங்கிலீஷ் வசனம் கேட்கவேண்டும் என்கிறபிரச்னை மட்டும்தான். ஆனால், தூரம் அதிகமாச்சே. சரி, மதராஸ் ஹோட்டலுக்குப் போயி அய்யரை கவுத்துட வேண்டியதுதான். கலக்கலாக சாப்பிட வேண்டியது. மூணு நாலு தடவை சோறு போடச் சொல்லலாம். அதே மாதிரி குழம்பும் மோரும் பப்படமும் ஊறுகாயும். பத்து நாள் தொடர்ச்சியா இந்த மாதிரி சாப்பிட்டா அய்யர் மூட்டை முடிச்சோட திருட்டுரயில் ஏறிடணும். அப்புறம் அவனோட வாசனை கூட இந்தப் பக்கமே வரக்கூடாது. வர்றேண்டா நான் பையன் எழுந்து அறைக்கு வெளியே வந்து லிப்ட் இறங்கி கன்னாட் ப்ளேஸின் வராந்தாக்களினூடே அய்யரை இலக்காக்கி நடக்கத்துவங்கினான்.
கண்ணாடியில் ரெடிமேட் உடைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கடைக்கு முன்னால் நின்றான். இளம்சாம்பல் நிறசில்க் புஷ் சர்ட்தான் பையனின் கவனத்தைக் கவர்ந்தது. ரசனையோடுதான் தைத்திருக்கிறான். காலர் வெட்டியிருப்பதைப் பார்த்தியா? வாயில் நீரூறுகிறது. இவனைப் போட்டுக்கொண்டாலே ஒரு பந்தா வந்துவிடும். பேரிளம்பெண்கள் வரிசையாக மண்டியிட்டுக் கொள்வார்கள். 37 ரூபா 50 பைசா என்று அதன் மார்பில் ரெண்டு இஞ்ச் சதுரக் காகிதத்தில் விலை குறித்திருக்கிறது. உயிரோட இருந்தா, பையன் புஷ் சர்ட்டைப் பார்த்துச் சொன்னான்: மூணு மாசத்துக்குள்ள உன்னை நான் உடுத்த ஆரம்பிச்சிடுவேன்டா.
வராந்தாக்கள் முடிந்து, வெயிலில் இறங்கி சாலையைக் கடந்து பையன் நடந்தான். பழிவாங்கும் கொடூரத் தன்மையுடைய வெயில். அபூர்வமாக காக்கைகள் மட்டுமே சஞ்சரித்துக்கொண்டிருந்தன. இந்த நகரத்தை தலைநகராக்கியவனுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுக்கணும், பையன் சொன்னான். இப்படி ஒரு நகரமா?
சிரிக்கும் தம்புரான் (Laughing Lord) என்கிற நகரத்தின் மிக உயர்ந்த ஹோட்டலின் வாசலை அடைந்தான் பையன். எதிரே சாலையோரம் கார்கள் கிடக்கின்றன. புதுப்பணக்காரர்கள் உணவருந்த வந்திருக்கிறார்கள். மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் தேசத்தில் உருவான அதிகப்படியான பணமெல்லாம் எங்கே போனதென்று விசாரிக்க ஒரு அரசாங்கக் கமிட்டி இருப்பது பையனின் நினைவுக்கு வந்தது. இப்படிப்பட்ட ஹோட்டல்களை கமிட்டி பார்வையிட்டால் காணாமல் போன பணத்தின் ஒரு பகுதியின் கணக்காவது கிடைக்கும். பொன்விலையிருக்கிற பானபட்சணங்கள். பேன்ட் சங்கீதம், நடனம், விபசார விடுதி ஒழிப்புத் திட்டங்கள், வயது வந்ததும் ஓட்டுரிமை, சோஷலிசம் சந்தோஷமாக சத்தமாக சிரிக்க வழியிருக்கிறதா என்று சிந்தித்தபடி பையன் இடவலம் பார்த்தான்.
திடீரென்று, பரிச்சயமான அந்த நம்பர் பையனின் கண்ணில் பட்டது. 3463 என்ற நம்பர் கொண்ட ஆனந்தவல்லியின் ஃபோக்ஸ் வாகன் வழியோரக் கார்களுக்கிடையில் பார்க் செய்யப்பட்டிருக்கிறது. பையன் இடுப்பில் கைவைத்து காரைப் பார்த்துச் சொன்னான்: அடிக்கள்ளீ நீ இதை எங்கிட்ட சொல்லவேயில்லையே, இந்த சொர்க்கத்துலதான் மத்தியானச் சாப்பாடுன்னு. இதுதானாடீ உன்னோட பதிவிரதைத்தனம்!
ஒரு வேளை திடீர்னு முடிவு பண்ணியிருக்கலாம், பையன் நினைத்துக் கொண்டான். இல்லைன்னா வேறு பையன்கள் யாராவது கூப்டிருக்கலாம். முதலிலேயே முடிவுபண்ணியிருந்தா நிச்சயமா சொல்லியிருப்பா.
போய் சோதிச்சே பாத்துடலாம், பையன் தனக்குள் சொன்னான். ஆனா, அவளுக்கு வருத்தமாயிடுமோ? வருத்தமெல்லாம் படமாட்டா. அந்த மாதிரி பிரச்னையெல்லாம் அவளுக்குக் கிடையாது. யாராயிருந்தாலும் அறிமுகப்படுத்திடுவா. ஒரு வேளை பட்டாளத்துக்காரங்க யாராவதாயிருக்கும். அப்போது அறிமுகப்படுத்தியபடி அவள் சொல்வாள்: மீட் கர்னல் வசிஷ்டா அல்லது ப்ரிகேடியர் சுக்ரமுனி அல்லது ஜெனரல் விஸ்வாமித்ரா. அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான்: ஃபீல்டு மார்ஷல் பையன்!
பத்தடி தூரத்தில் ஹோட்டலின் பிரவேச துவாரத்தை நோக்கி பையன் நடந்தான். சிரிக்கும் தம்புரான் என்கிற புராணம் ஆங்கில பாஷையில் பெரிய பித்தளை எழுத்துக்களில் கருத்த மார்பிள் சுவரில் பதிக்கப்பட்டிருக்கிறது. பல்லவ காலகட்டத்தின் தச்சுப் பாணியில் கொத்துவேலைப்பாடுகளின் கூடாரமான பிரம்மாண்டக் கதவு. கதவுக்கருகில் காக்கி யூனிஃபார்மும் அதற்கு மேலே மார்புக்குக் குறுக்காக தோல் பெல்ட்டுமணிந்த ஆஜானுபாகுவான ஒரு சர்தார்ஜி காவல் காக்கிறான். இந்தக் கதிகேடு நிகழ்வதற்கு முன்னால் பட்டாளத்திலிருந்திருப்பான். தளர்ந்து போன சிங்கமொன்று பையனின் நினைவில் வந்தது.
பையன் வாசற்படி ஏறியபோது சிங்கம் குனிந்து நிமிர்ந்து கதவின் பித்தளைப் பிடியை இழுத்தது. கதவு ஒரு பாதி திறந்தது. பையன் உள்ளே பிரவேசித்தான். மெரூன் நிறதடிப்பான கர்ட்டனுக்குப் பின்னாலிருந்து பேன்ட் சங்கீதம் பிரவாகித்து வருகிறது.
பையன் கர்ட்டனை விலக்கினான். விசாலமான ஹால். முடியும் இடமே தெரியவில்லை. ஒன்றும் தெளிவாகவும் இல்லை. சுவரில் ஆங்காங்கு மொட்டு விட்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் ஹாலில் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் உருவங்கள் கருப்பாய்த்தான் தெரிகிறது. தூரத்தில் ஒரு மூலையில் ஒரு பிளாட்ஃபார்மில் பேன்ட் வாத்தியக்காரர்கள் ஃபுல்சூட்டில் வேலை பார்க்கிறார்கள். மைக்குக்கு முன்னால் நேர்கோடு போல் மெலிந்த ஒரு விதேசஸ்த்ரீபிரஜை நின்று குலுங்கியபடி சில விசித்திர சப்தங்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். பாடுகிறாளோ, பையன் நினைத்துக்கொண்டான். பாடட்டும், பாடட்டும். யாருடைய குத்தகையும் அல்லவே சங்கீதம். தூரத்தில் வடகிழக்கு மூலையில் இரண்டு பேர் எதிரெதிராய் உட்கார்ந்திருக்கிறார்கள். அதில் பின்பக்கம் திரும்பி உட்கார்ந்திருப்பவளா கர்னல்? சந்தேகம். அரூபமான ஏர்கண்டிஷனிங் எந்திரம் பெய்துகொண்டிருக்கும் குளிர்மையினூடே பையன் நடந்தான். தடிமனான தரைவிரிப்பில் கால் ஆழ்ந்து போவது போலவும் நடந்தால் தீராத மாதிரியும் இருந்தது. பாதி தூரம் போனபோது அவள்தானென்று தெரிந்தது. அப்போ இன்னொருத்தி யார்? பையன் இன்னும் நடந்தான். வேகமாக ஒரு மைல் தூரம் நடந்ததாய் தோன்றியபோது அவளுக்குப் பின்னால் போய்ச் சேர்ந்தான். பையன் சொன்னான்: குடாஃப்டர்நூன், கர்னல்.
அவள் திரும்பிப் பார்த்தாள்: ஓ பையா, நீயா?
பையன் மேஜைக்கருகில் நின்றான். மற்றவள் கர்னலைவிட இளமையாயிருந்தாள். முடியை காதோடு ஒட்ட வெட்டியிருந்தாள். நேர்த்திக் கடன் போல தேகத்தில் ஆபரணம் ஏதுமில்லை. உதட்டில் லிப்ஸ்டிக்குமில்லை. தூவெள்ளை தரித்திருந்தாள். எந்த க்ரூப்டா இவ? பையன் யோசித்தான். ஓவியமா, சாஹித்யமா, சமூக சேவகமா, பணம் வசூலா, கூட்டுறவுச் சங்கமா? சட்டென எதுவும் தோன்றவில்லை.
பேரர், கர்னல் விளித்தாள்: ஒரு சேர் கொண்டு வா.
பிறகு பையனை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள்: பத்திரிகையாளன். வளர்ந்து வருகிற அறிவு ஜீவி. என்னுடைய அயல்வாசி. (நல்ல அயல்வாசின்னு சொல்லமாட்டேன்.)
திரும்ப அவளை பையனுக்கு: மிஸ். நீலிமா. கல்கத்தாவிலிருந்து சின்ன வயசிலிருந்தே என் தோழி. மத்திய மந்திரி, ஸர்க்காருடைய மகள். ஐக்கிய தேச இளைஞர் அமைப்போட இந்தியப் பிரதிநிதி. எப்பவும் வெளிநாடுதான். போனவாரம்தான் ரோமிலிருந்து வந்திருக்கா.
பையன் ரோமாக்காரியை வணங்கினான். அவளும் திரும்பச் செய்து பிறகு சொன்னாள்: ரேணு உங்களைப் பத்தி இப்பத்தான் சொன்னா.
பையன் சிரித்தான். பிறகு தன்னிடம் சொன்னான்: பாருடா பூதமே! அவ உன்னைப் பத்தி அவளோட தோழிகிட்ட, நீ இல்லாதபோதே பேசியிருக்கா. இப்படிப்பட்டவளோட பதிவிரதைத்தனத்தைப் பத்தி கொஞ்ச நேரம் முன்னாடி, அதுவும் நடுரோட்டுல வச்சு சந்தேகப்பட்டே பாரு உன்னை உதைக்க ஆளில்லாததனாலதான்டா. நீசன்டா நீ!
பையன் ரேணுவிடம் சொன்னான்: இவ்ளோ அழகான ஒரு இடத்தில வெச்சு என்னை நினைச்சியே. நன்றி.
ரேணு சொன்னாள்: சாப்பாட்டு நேரம் ஆகும்போது நான் உன்னை ஒருக்காலும் மறக்கறதில்ல.
ஐக்கியதேசக்காரி சிரித்தாள்.
ஜ்ஜ்ஜிரிக்காதேடீ வெள்ளைக்காரீ, ஜ்ஜ்ஜிரிக்காதே.
பேரர் நாற்காலி கொண்டு வந்தான். பையன் உட்கார்ந்தான்.
நீ எப்படி இங்க வந்து சேர்ந்தே? ரேணு கேட்டாள்.
சாப்டறதுக்காக மதராஸ் ஹோட்டலுக்குப் போயிட்டிருந்தேன். பையன் சொன்னான்:
அப்பத்தான் வழியில உன் கார் நிக்கறதைப் பார்த்தேன். உடனே உள்ளே நுழைஞ்சிட்டேன்.
ரோமிலிருந்து வந்தவளின் கண்களில் ஒரு மின்னல் மின்னி மறைவதை பையன் பார்த்தான். ஒரு வேளை, உண்மையைச் சொன்னதற்காகப் பாராட்டுகிறாள் போலிருக்கிறது, பையன் நினைத்துக்கொண்டான்.
நான் உனக்கு போன் பண்ணியிருந்தேன், ரேணு பையனிடம் சொன்னாள்:
நீ ரூமில இல்லன்னு எக்ஸ்சேஞ்ச் சொல்லிடுச்சு.
எத்தனை மணிக்குக் கூப்பிட்டே?
பனிரெண்டு மணிக்கு.
நான் லைப்ரரில இருந்திருப்பேன்.
திடீரென்று சுற்றிலும் கைதட்டல் கேட்டது. நேர்கோட்டுக்காரி சுந்தரி பாட்டை நிறைவு செய்திருக்கிறாள். ஜனம் சம்பவத்தைப் பாராட்டியிருக்கிறது!
ரொம்ப நேரமாச்சா வந்து? பையன் கேட்டான்.
அஞ்சு நிமிஷம்கூட ஆகல. ரேணு சொன்னாள்: மெனு கார்டுக்காக காத்திட்டிருக்கோம். அப்பதான் நீ வந்து சேர்ந்தே.
ஓ அப்ப இன்னும் சாப்பாடு ஆகல இல்லை. நானும் இந்தச் சடங்கில் பங்கெடுத்துக்கறதைப் பத்தி என்ன அபிப்ராயம்?
இருவரையும் மாறி மாறிப் பார்த்து பையன் கேட்டான்.
நீங்க ரெண்டு பேருமே என்னோட கெஸ்ட்தான். நீலிமா சொன்னாள்.
வலுக்கட்டாயமா உள்ளே நுழைஞ்சபிறகு வேறவழியில்ல, இல்லியா? பையன் கேட்டான்.
ஓ கமான் பையன்! நீலிமா சொன்னாள்.
என்னாது! பையன் நினைத்தான். உனக்கு என்னை இவ்ளோ பழக்கமா, பையன்னு கூப்டறஅளவு? நீ ஒரு சிங்காரிதான்டீ, ரோமாக்காரீ!
பையன் ரேணுவைப் பார்த்தான். டயலாக்கைக் கேட்காத மாதிரி உட்கார்ந்திருக்கிறாள்.
பையன் சொன்னான்: உன்னோட காரை வெளியே பார்த்தபோது யாராவது பாய்ஃப்ரெண்டா இருப்பாங்கன்னு நெனச்சேன்.
உன்னை ஏமாற்றியதற்கு வருத்தப்படுகிறேன், ரேணு சொன்னாள்: இன்னொரு தடவை பார்க்கலாம்.
மெனுகார்ட் என்னும் மஹாகிரந்தத்தோடு பேரர் வந்து சேர்ந்தபோது அதை வாங்கி ரோமாக்காரியிடம் கொடுத்தபடி ரேணு சொன்னாள்: ஆர்டர் பண்ணு, நீலிமா.
பையன் ஆர்டர் பண்ணட்டும், நீலிமா சொன்னாள். டேஸ்ட் எப்படீன்னு பார்க்கலாமே.
உன்னை விடப் பெரிய புடுங்கிகளெல்லாம் பார்த்து ஓ.கே. பண்ண டேஸ்டாக்கும் என்னோடது. பையன் நினைத்தான்.
டேஸ்ட் பரவாயில்லாம இருக்கும். கிரந்தத்தை வாங்கிக்கொண்டு பையன் சொன்னான்.
பிறகு கலக்கலாய் ஆர்டர் பண்ணினான். ஸ்பானிஷ் சூப், தந்தூரி ரொட்டி, சிக்கன் காஷ்மீரி, ரோஸ்ட் லாம்ப், ஃப்ரஞ்ச் சாலட், இரண்டு வகைப் பாயசம், காஃபி.
ஃபர்ஸ்ட் க்ளாஸ். நீலிமா சொன்னாள்.
அப்போ சாப்பாட்டு விஷயத்தில நீயும் என்னை மாதிரி ஆர்வமுள்ள பார்ட்டிதான், பையன் நினைத்துக் கொண்டான். வாடீ, வாடீ.
ரேணு சிரித்துக்கொண்டிருந்தாள்.
என்னாச்சு? பையன் கேட்டான்.
எதுக்கும் அலட்டிக்க மாட்டிங்கறியேன்னு நினைச்சேன், ரேணு சொன்னாள்.
சரி, நீ சிரி. பையன் நினைத்துக் கொண்டான். அந்த சைக்கிள் கேப்ல ரோமாக்காரியை நான் விசாரணை பண்ணிடறேன்.
அப்ப ரோம்ல என்ன பண்ணிட்டிருந்தே? பையன் கேட்டான்.
ஐக்கிய தேச இளைஞர் அமைப்போட நிர்வாகக் கமிட்டில இருந்தேன்.
அவள் முன்னால் வந்து மேஜை மேல் முஷ்டியை ஊன்றியபடி சொன்னாள்.
பிரான்சிலிருந்து மொஸ்யே பெல்லேவோன் வந்திருந்தாரா?
இருந்தாரு. அவரைத் தெரியுமா உங்களுக்கு?
பழைய ஃப்ரெண்ட்தான். பையன் அலட்சியமாகச் சொன்னான். இரண்டு வருடம் முன் ஒரு முறைபார்த்த பரிச்சயம் மட்டுமே பையனுக்கு இருந்தது. அதுவும் ஒரு ப்ரஸ் பார்ட்டியில் வைத்துத்தான். தலைவருக்குத் தன்னைத் தெரியும் என்று பையனுக்குத் துளிக்கூட இல்லை. இருந்தாலும் எதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும்?
நீலிமாவின் கண்கள் பிரகாசித்தன. அவள் சொன்னாள்: இந்த வருஷத்து பிரசிடென்ட் அவர்தான்.
ஓ, அப்படீன்னா ஒரு வாழ்த்துச் செய்தி கேபிள் பண்ணணுமே.
இந்த வின்டர்ல ஒரு வேளை அவர் டெல்லிக்கு வரக்கூடும்.
வரும்போது கண்டிப்பா எனக்கும் சொல்லு, பையன் சொன்னான்.
கண்டிப்பா. இப்படியாக உன்னோட பந்தாவை நான் கீழடக்கிட்டேன். பையன் நினைத்தான்.
பையா, நீ இந்த அமைப்பில முதல்லேயே இருந்தே இல்லியா? ரேணு கேட்டாள்.
ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் இருந்தேன். பையன் சொன்னான்.
அப்புறம் ஏன் விட்டிட்டீங்க? நீலிமா கேட்டாள்.
இதுக்கெல்லாம் எங்கே நேரம்? பையன் சொன்னான்: ஈடுபாடோட இயங்க முடியலன்னா ஒரு அமைப்பில இருந்து என்ன பிரயோஜனம்?
அது சரியில்ல. நீலிமா சொன்னாள். நீங்க மறுபடியும் சேரணும்.
ஆமா. ஆகியே தீரணும். ரேணுகா சொன்னாள்.
தங்கமே. உன்னோட நக்கல் பரவாயில்லயே. பையன் நினைத்தான்.
முக்கியமான விஷயமே, எங்க பிரசிடென்டோட இந்திய நண்பர் அமைப்பில அங்கத்தினராகியே தீரணும். நீலிமா சொன்னாள்.
பார்க்கலாம். பையன் மிக அழகாக மந்தகாசப் புன்னகை புரிந்தபடி சொன்னான்: நாம இனியும் சந்திப்போமே. அப்போ பேசலாம்.
தேங்க்யூ.
அப்போது மேஜைக்கடியில் பையனின் வலது கால் ஷூ மிதிக்கப்பட்டது. ரேணு பிரேக் போடுகிறாள். அவன் அவளைப் பார்த்தான். ஒன்றும் தெரியாத மாதிரி பாட்டை உருட்டிக் கொண்டிருந்த நேர்கோட்டுக்காரியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஆனந்தவல்லி. பையன் ரோமாக்காரியைப் பார்த்தான். நாவல், சிறுகதை போன்ற சங்கதிகளை எழுதுகின்ற மஹாபண்டிதர்களான வேலையற்றவர்கள் சொல்வதைப் போல அர்த்தபுஷ்டியோடு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள்.
அப்போது சூப் ஆசான் வந்தார். அவரை சேவிக்கத் தயாரானபடி பையன் வம்பளப்பைத் தொடர்ந்தான்: இத்தாலி எப்படியிருக்கு?
மனோஹரமான தேசம், அவள் சொன்னாள்.
என்ன ஒரு ஸ்கூப் நியூஸ்! பையன் நினைத்துக் கொண்டான். நீ ரோமுக்குப் போய் நேரில் பார்க்காமலிருந்தா யாராலும் நம்பியிருக்க முடியாதும்மா.
ரெண்டு மூணு கட்டுரையெழுத வேண்டியதுதானே, அந்த தேசத்தைப் பத்தியும் ஜனங்களைப் பத்தியும்? பையன் கேட்டான்.
வெளியிட முடியுமா என்ன?
என் பத்திரிகையில பார்க்கலாம்.
தாட்ல்பீ ஃபைன்!
அதிலென்னடீ பிரச்சினை, செந்தாமரைத் தண்டே - பையன் நினைத்துக் கொண்டான். மந்திரியோட பொண்ணுன்னு சொன்னா கைநாட்டுக்காரன், முன்னாள் பத்திர வியாபாரி, பத்திரிகை முதலாளி மூக்கால நடந்து உங்கிட்ட வந்துருவான்.
ஆனா ஒரு விஷயம். பையன் சொன்னான்.
என்னது?
பதிலுக்கு எனக்கு சில உதவிகள் பண்ணணும்.
சூப்பாரை சேவித்தபடி பையன் சொன்னான். சட்டென்று ரேணு பையனைக் கடுப்புடன் பார்த்தாள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் பையன் சொன்னான்:
அரசியலோட பெரிய இடங்கள்ல நடக்கிற விஷயங்களை முன்னாடியே எனக்கு ஒத்திக் குடுக்கணும். ஸ்கூப்புகள். புரிஞ்சுதா?
ப்ளீஸ் நீலிமா, உன்னால அது முடியும். ப்ளீஸ் ஹெல்ப் பையன்.
அவளுடைய கடுமையான பார்வையின் நோக்கம் நான் அபத்தமாக எதுவும் பேசிவிடக்கூடாது என்பதுதான். பையனுக்குப் புரிந்தது. தான் சொன்னது ஒரு அறிவுபூர்வமான ஒரு விஷயம்தான் என்று தெரிந்துகொண்டபோது ஆசுவாசமடைந்துவிட்டாள். அழகான தடிச்சிகள் இவ்வளவு முட்டாள்களுமா?
என்னால முடிஞ்சதை நான் பண்றேன். நீலிமா சொன்னாள்: அப்பாவை நான் அறிமுகம் செஞ்சு வைக்கிறேன். அவருக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிடும்.
இன்னும் ஒரு மரமண்டை மந்திரியோட காதலும்தான் வேண்டியிருக்கு, பையன் நினைத்துக் கொண்டான்.
நேர்கோட்டுக்காரியின் பாட்டு நிறைவடைந்தபோது மீண்டும் கைதட்டல் எழுந்தது. இந்த முறை இடைவெளி விட்டும் மெலிதாகவும் இருந்தது அந்த நிகழ்வு. காரணம் என்னவாயிருக்குமென்று பையன் ஆராய்ந்தான். ஸங்கீத ரஸிகர்கள் பெரும்பாலும் பக்ஷண ரஸிகர்களாகிவிட்டிருந்தார்கள்.
பையன் (உள்ளுக்குள்) இப்போ ஒரு தமாஷ் பண்ணலாம்.
(வெளியில்)
அறைக்குள் சிக்கிக்கொண்டு பயந்து நடுங்கும்
ஒற்றைப் புறாவின்
சிறகடித்தல் போலிருக்கிறது
இந்தக் கைதட்டல்.
ஆஹா. கவிதையாச்சே! தட்டிலிருந்து தலையை நிமிர்த்தி ரோமாக்காரி சொன்னாள்: கவிதையும் எழுதுவீங்களா?
இல்லை. பையன் சொன்னான்.
நான் எப்பவுமே நெனக்கறதுண்டு. பையன் கவிதை எழுதினா நல்லாயிருக்குமேன்னு. ரேணு சொன்னாள்.
நீங்க ஒரு கவிஞர்தான், மற்றவள்.
டேய், நீ இப்போ சிரிச்சேன்னு வச்சுக்கோ, பையன் தனக்குச் சொல்லிக் கொண்டான். உன்னை நான் நாடு கடத்திடுவேன்.
உங்களின் நம்பிக்கை உங்களை ரட்சிக்கட்டும் பையன் சொன்னான்.
தூரத்தில் வளைவு திரும்பி பேரிகை முழங்க தலைப்பாகையும் கோழி இறகுகளும் சூடிய பேரர்கள் ரொட்டி-கோழி-ஆடாதி பக்ஷணங்களுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்.
பையன் சொன்னான்: காஷ்மீரிக் கோழியையும் பொரித்த ஆட்டுக் கிடாவையும் கவனமாக அமைதியாக புசிக்க வேண்டும். அதனால் இவை புசிக்கப்படும்போது பெரும்பாலும் பேச்சு இருக்காது. ரேணுவுக்குத் தெரியும். நீலிமா மன்னிக்கணும்.
இனி பொதுவா பேச்சு இருந்தாலுமே அதுல ஒரு எழுத்துகூட உங்கிட்டயிருந்து எதிர்பார்க்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியும். ரேணு சொன்னாள்.
தாட்ஸெ குட் ஒன் நீலிமா சொன்னாள்.
பையன் உணவருந்துவதைப் பார்ப்பது என்பதே ஒரு பேரானந்தம் என்று ரேணுவுட்பட பையனுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். அந்தக் கடமையை மிக அழகாக நிறைவேற்றி விடுவானாம். பார்ப்பவர்களின் வயிறு நிறைந்துவிடும் என்பது பிரமாணம்.
இப்போது பையன் முதலில் வறுவல் ஆட்டை ஆக்கிரமிக்கிறான். இரண்டு கைகளின் விரல்களையும் உபயோகித்து அன்னாரின் அம்சங்களைக் கடித்துத் தின்கிறான். எலும்புகளைத் துடைத்துத் தூய்மைப்படுத்தி அழகாக பிளேட்டின் ஒரு பக்கத்தில் அடுக்கி வைக்கிறான். தவணை முறையில் அளவளவாக நல்ல தண்ணீர் அருந்துகிறான். ஆடு முடிந்தபோது காஷ்மீரிக் கோழித்தட்டையும் தந்தூரி ரொட்டித் தட்டையும் அருகில் இழுத்து வைத்து ரொட்டியை சின்னதாய்ப் பிய்த்து அவனை கோழியின் தட்டில் முனை துடைத்து முக்கி எடுத்து காதலோடு தின்கிறான். இரண்டு முறை ரொட்டி-கோழி, ஒரு முறைசாலட், இரண்டு முறை ரொட்டி-கோழி, ஒரு முறை சாலட்-என்றானது சூத்திரம். ஒரு துளிகூட வெளியே சிந்தவோ தெறிக்கவோ இல்லை. உணவைப் பார்த்தால் அல்ல, அதை அவன் உண்ணுவதைப் பார்த்தால்தான் அடுத்தவரின் வாயில் நீரூறும். ஆஹா என்ன அழகு!
எல்லா நல்ல விஷயங்களுமே ஓரெல்லை வந்தவுடன் முடிந்துவிடுவதைப் போல, தின்று தின்று, பையனின் யக்ஞமும் ஒரு முடிவுக்கு வந்தது. மடியில் விரித்திருந்த துணியால் வாயும் விரலும் துடைத்து நாற்காலியில் சாய்ந்தமர்ந்து பையன் சொன்னான்: சூப்பர் லஞ்ச்!
ஸ்த்ரீ பிரஜைகள் பையனோடு போட்டியோட முனைந்து முயன்று கொண்டிருந்தார்கள்.
இனி பேச்சை ஆரம்பிக்கலாமா? ரோமாக்காரி கேட்டாள்.
புட்டிங்கும் முடிஞ்சிரட்டும், ரேணு சொன்னாள்.
பரவாயில்லை, பையன் சொன்னான். ரெண்டு பெண்கள் இவ்ளோ நேரம் பேசாம இருந்தீங்களே ரெக்கார்ட் பிரேக் பண்ணிட்டீங்க. அதனால சலுகை குடுக்கறேன். இனிமே பேசலாம்.
கட்டுரை எழுதினா, மந்திரிகுமாரி கேட்டாள்: பிரதியைக் கொஞ்சம் பார்ப்பீங்களா?
ஓ, இதுதான் உன்னோட உந்துதல் இல்லையா. பையன் நினைத்தான்.
புரியல? பையன் கேட்டான்.
திருத்தித் தரணும்கறேன். அவள் சொன்னாள்: ஏன்னா, உரைநடை இதுவரைக்கும் நான் எழுதினதில்லை.
அய்யோ! பையன் நினைத்தான். அப்படீன்னா கவிதைதான் உன்னோட நிரந்தர எதிரியா?
அது சரி பண்ணிக்கலாம். பையன் சொன்னான்: ஆனா அந்த ஸ்கூப் மேட்டரை மறந்துடக்கூடாது.
என்னால் முடிஞ்சதை நான் செய்வேன், அவள் சொன்னாள்.
பையனின் கால் மீண்டும் மிதிபட்டது. மிதியை அலட்சியப்படுத்திவிட்டு பையன் கேட்டான்:
உரைநடை எழுதறதில்லன்னா கவிதை எழுதறதுண்டா?
எப்பவாவது. அவள் சொன்னாள்.
மாட்டிக்கிட்டடா மகனே. பையன் தனக்குள் சொன்னான்: கவிதையைத் திருத்த வேண்டிய கதிகேடும் உனக்கு வரப்போகுது. நீ ஆடறஆட்டத்துக்கு வேணும்டா உனக்கு.
கடைசியா பண்ண படைப்பு என்ன? பையன் கேட்டான்.
இயற்கையின் காட்சிகள் என்னை உத்வேகம் கொள்ள வைக்குது, பெண்பூசாரி போல் சாமியாடியபடி அவள் சொன்னாள்:
ரோமிலிருந்து பாரீசுக்குப் பறக்கும்போது ஆல்ப்ஸ் மலைத் தொடர்களோட ஒரு தூரக் காட்சி இருக்கு. பனியும் அருவியும் மரக்குடில்களும்...
உடனே அதைப் பத்தி எழுதியிருப்பியே?
எழுதிட்டிருக்கேன். அவள் சொன்னாள். நம்மோட இலக்கியத்தில இந்த மாதிரிக் கவிதைகள் இல்லைன்னு நெனைக்கறேன்.
அப்போ எந்த மொழியில எழுதறே? பையன் கேட்டான்.
இங்க்லீஷ்ல.
முதுகில் ஒரு அறை விழுந்தமாதிரி இருந்தது பையனுக்கு. இவளோட போக்கு சரியில்ல. பையன் நினைத்துக் கொண்டான். முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடணும். இவ ஆல்ப்ஸ் மலைகளைப் புடிச்சு இங்க்லீஷ்ல கவிதை எழுதிட்டான்னா அப்புறம் அந்த மலைத் தொடர்களால ஒருபோதும் தலை நிமிர்ந்து நிக்க முடியாது. யுகம்யுகமா முழங்கப்போற ஒரு அபகீர்த்தியாயிடும் அது. காதோடு காதா இந்த செய்தியை மூடிப் புதைச்சாகணும்.
நம்ம இலக்கியத்தில இப்படிப்பட்ட பார்வைகள் இல்லைன்னு சொல்றது சுத்த அபத்தம், பையன் சொன்னான்:
விமானமே இல்லாத அந்தக் காலத்துல பிரம்மாண்டமான ஆகாயத்திலிருந்து கங்கா நதியோட பறவைக்கண்பார்வையிருக்கு, எழுதினது காளிதாஸன்:
தஸ்யோல்ஸங்கே பரிணத இவ ஸ்ரஸ்த கங்காதுகுலாம் ந த்வம் த்ருஷ்ட்வா ந புனரளகாம் ஜ்யால்ஸதே காமகரின்.
இமயராஜாவோட இடுப்பில் புரண்டு கிடக்கும் வெள்ளி அரைஞாண் போல அவிழ்ந்து கிடக்கிறாள் கங்கா. எப்படியிருக்கு?
ஓ, மை! ஒரு வாய் புட்டிங்கை தன்னிச்சையாக விழுங்கியபடி சுந்தரிக்குட்டி சொன்னாள்: என்ன ஒரு சித்திரம்! என்ன ஒரு பார்வை! உங்களுக்கு சமஸ்க்ருதமும் தெரியுமா?
பதினாறு வயசுக்குள்ள, பையன் சொன்னான்: சமஸ்க்ருதத்திலயும் இங்க்லீஷியும் இருக்கற க்ளாசிக்குகளையெல்லாம் முடிச்சிட்டேன். அந்த ஞானம் மட்டும்தான் இப்ப என்னோட சொத்து.
நீ அவளை அடிச்சு கவுத்துட்டேடா, என ரேணு பையனின் காலை மிதித்தாள்.
இவ்ளோ திறமையிருக்கு உங்ககிட்ட. ஒரு பத்திரிகையில கிடந்து அழிஞ்சிட்டிருக்கறது எவ்ளோ பரிதாபகரமான விஷயம் நீலிமா சொன்னாள்.
கொஞ்ச நேரம் கழித்து ரோமாக்காரி கேட்டாள்: கட்டுரையில ஏதாவது சந்தேகம் கேட்கணும்னா உங்களை எப்படிப் பிடிக்கிறது?
ஓ. அப்ப நீ கவிதையை விட்டுட்டே. ஆல்ப்ஸ் மலைத்தொடர் தப்பிச்சுது ஆஃபீசுக்குக் கூப்டா போதும். பையன் சொன்னான்.
ஒரு நாள் வீட்டுக்கு வரலாமே. டின்னருக்கு. நாளைக்கு வர்றீங்களா?
பையனை முந்திக்கொண்டு ரேணு சொன்னாள்: நாங்க நிச்சயமா வரோம் நீலிமா. இந்த உஷ்ணமெல்லாம் கொஞ்சம் தணியட்டும்.
இந்த முறை காலில் விழுந்த மிதி பையனுக்கு நன்றாகவே வலித்தது.
33124 இதுதான் என்னோட டெலிபோன் நம்பர். நீலிமா சொன்னாள்.
ஞாபகம் வச்சுக்கறேன். பையன் சொன்னான்.
மறந்துடாதீங்க. டைரில நோட் பண்ணிக்குங்களேன், ப்ளீஸ்!
டைரக்டரில இருக்காதா என்ன? ரேணு கடுமையாகக் கேட்டாள்.
இருக்காது, நீலிமா சொன்னாள்: இது என்னோட தனிப்பட்ட போன் நம்பர். கிடைச்சு மூணு நாள்தான் ஆச்சு. அப்பாதான் ரெடிபண்ணிக் குடுத்தார்.
பரவாயில்ல, பையன் நெற்றியில் தொட்டுச் சொன்னான்: இங்கே எழுதிட்டேன். 182டோட வர்க்கம் 33124.
ஓ மை! நாற்காலியிருந்து பாதி எழுந்தபடி அவள் கூவினாள்: நீங்க மாத்தமாட்டீஷியனுமா?
பையன் அலட்சியமாகச் சிரித்தான். கதகளியில் ராவணனின் வேடம் பையனின் நினைவுக்கு வந்தது: நான் யாரு தெரியுமாடி, பூவே.....
தாட்ஸ் கிரேட், அவள் சொன்னாள்.
ஸ்டேஜ் முழுக்க உன் கைக்குள் வந்துடுச்சுடா, பையன் தனக்குள் சொன்னான்: உன்னைப் பத்தின ஆராதனை அவளோட கண்ணுல மயில் மார்க் தீப்பெட்டியோட குச்சியை உரசினதைப் பார்த்தியா? கால் மீண்டும் மிதிக்கப்பட்டபோது பையன் ரேணுவைப் பார்த்தான்.
சிகரெட் வேணுமா பையா? பாய் போயிட்டிருக்கான்.
பையன் திரும்பிப் பார்த்தான். சர்க்கஸ்காரன்போல விசித்திர வேடமணிந்த ஒருவன் கழுத்தில் ஒரு ட்ரேயை தொங்கவிட்டுக்கொண்டு அதில் நிறைய தூமபான வஸ்துக்களோடு சுற்றிலும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். ஒரு சுருட்டை ஃபிட் செய்துகொள்ளலாமென்று முடிவு செய்து பையன் அந்தக் கதாபாத்திரத்தை அழைத்தான்:
ஹவானா இருக்காடே?
இருக்குங்க சார்.
கொடு ஒண்ணு.
பணம் கொடுக்க இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பர்ஸைத் திறந்தார்கள்.
நான் கொடுக்கறேன் நீலிமா, ரேணு சொன்னாள்.
நோ, நோ. நான் கொடுக்கறேன்.
நீலிமாவின் நோட்டு நுழைவதற்கு முன் எண்ணற்ற காசுகளை ட்ரேயில் போட்டு ரேணு அந்தப் பையனை நகரத்தை விட்டே துரத்திவிட்டிருந்தாள். டேய், டேய் பையன் மனதுக்குள் சொன்னான்: உன்னோட சில்லறை அதிர்ஷ்டத்துக்கு அளவேயில்லடா நீ ஒரு மைனர் மகாதேவன்தான்டா!
பேரர் காப்பியோடு வந்தபோது ரேணு அவனிடம் சொன்னாள்: பில் கொண்டு வா.
ஏன் இவ்ளோ அவசரம்? நீலிமா கேட்டாள்.
வாட்சைப் பார்த்தபடி ரேணு சொன்னாள்: ரெண்டரை மணிக்கு ஒரு மெடிக்கல் கான்ஃபரன்சிருக்கு. அஜன்டா பேப்பர்ஸ் எதையுமே இன்னும் பாக்கல.
இன்னும் ஒரு பதினஞ்சு நிமிஷம், நீலிமா சொன்னாள்.
ஸாரி மை டியர்! ரேணு சொன்னாள்: இனியொரு தடவை...
ரோமாக்காரி ஏமாற்றமாய்ப் பையனைப் பார்த்தாள்.
லஞ்ச் என்னோடது, தெரியுமில்ல? அவள் ரேணுவுக்கு நினைவுபடுத்தினாள்.
அதனாலென்ன? யாரு கொடுத்தா என்ன? ரேணு சொன்னாள்.
அதெல்லாம் முடியாது. நீங்க என்னோட கெஸ்ட்.
சரி.
இல்லை. பில்லை நான்தான் கொடுப்பேன், சுருட்டின் அற்புதமான மணமுள்ள புகையை வெளிவிட்டபடி பையன் சொன்னான்: எங்கிட்ட நிறைய சில்லறை இருக்கு.
நீலிமா சிரித்தாள்.
நீ இவ்ளோ நேரம் பேசினதில இது மட்டும்தான் ஜோக் ரேணு சொன்னாள்.
இந்த காஃபி கூட ஒரு நல்ல ஃப்ரெஞ்ச் பிராண்டியிருந்தா நல்லாயிருந்திருக்கும் பையன் சொன்னான்.
ஷார்த்ரோஸ் கொஞ்சம் வீட்டிலயிருக்கு. நீலிமா சொன்னாள்.
ம்... ஒருநாள் கலக்கிடலாம், பையன் சொல்லச்சொல்ல மேசைக்கடியிலிருந்து காலை இழுத்துக் கொண்டான்.
யூ அர் வெல்கம். அவள் சொன்னாள்.
பில் வந்தபோது நீலிமா ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து தாம்பாளத்தில் போட்டாள். புத்தம்புதிய நோட்டு. மந்திரித்தந்தை மகளுக்காக தனி சிரத்தையெடுத்து அச்சடித்திருக்கிறார் போல.
நூறு ரூபா நோட்டைப் பார்க்கும்போதுதான் ஞாபகம் வருது. நான் இங்க முதன்முதலா வந்த சந்தர்ப்பம், பையன் சொன்னான்:
சும்மா ஒரு ஜாலிக்காக வந்தேன். சம்பளம் கிடைச்ச நாள். காப்பி குடிச்சு முடிச்சு பில் வந்தபோது பேரர்கிட்ட கேட்டேன்: 'நூறு ரூபாவுக்கு சேஞ்ச் இருக்குமா' அவன் முகத்தில வந்தது பாரு ஒரு துச்சம். அந்த நிமிஷமே நான் செத்திருக்கணும். அப்புறம் திருப்பி ஒரு கேள்வி வேற கேட்டான்: ஆயிரம்னா சொன்னீங்க சார்?
அப்புறம், அப்புறம்? ரோமாக்காரி கேட்டாள்.
அப்புறம் எதுவும் ஞாபகமில்ல. பையன் சொன்னான்: என்னை எடுத்துத்தான் வெளியே போட்டதா சாயந்தரம் வெளிவந்த விசேஷப் பதிப்பில செய்தி வெளியிட்டிருந்தாங்க.
அது சரி ரோமாக்காரி சிணுங்கிச் சிரித்தாள்: அதுக்குப் பிறகு இன்னிக்குத்தான் இங்க வர்றீங்களா?
ஆமா.
நிஜமாத்தானா? ரேணு எரித்துவிடும் கண்களுடன் கேட்டாள். மஹாபாரதத்தின் கவிதைக் கீற்று ஒன்று பையனின் நினைவில் வந்தது: பாஞ்சாலி தீக்ஷணநயனா.
சாரி, பையன் சொன்னான்: போன மாசம் ரேணுவோட பிறந்தநாள் விருந்துக்கு வந்திருந்தேன்.
என்ன ஒரு ஞாபகசக்தி! ரேணு சொன்னாள்.
பையன் மன்னிப்பை யாசித்தான்: சாரி, பேபி!
பரவாயில்லை, மறந்திடு. ரேணு சிரிப்பதாகக் காண்பித்துச் சொன்னாள்.
பாக்கி பணத்துடன் ஹோட்டலின் சிப்பந்தி வந்தபோது ரேணு எழுந்தாள்: போலாம்.
சிப்பந்திக்கு தாராளமாக நீலிமா டிப்ஸ் கொடுப்பதை பையன் கவனித்தான். பணத்தின் மீதான உன்னோட அலட்சியம் பரவாயில்லையேடி கண்ணு, பையன் நினைத்தான். மகளிர் முதலில், பிறகு ஆண் என்றமுறையில் அவர்கள் வெளியேறினார்கள்.
எதிரேயிருந்த கடையைச் சுட்டி ரேணு நீலிமாவிடம் கேட்டாள்: வாட்ச்மேக்கர்கிட்ட போகணும்னு சொன்னியில்ல?
ஆமா போகணும்.
அந்த வேலையை முடிச்சிட்டு நிக்கறியா? நான் பையனை ட்ராப் பண்ணிட்டு வந்திடறேன்.
நான் நடந்துபோயிடறேன், பையன் சொன்னான்: பக்கம்தானே.
இல்லை, ரேணு சொன்னாள்: நான் உன்னை ட்ராப் பண்றேன்.
அது சரி, பையன் நினைத்தான்: என்னவோ பேசவேண்டியிருக்குங்கறே. வந்துட்டாப்போச்சு.
அப்ப சரி, நீலிமா பையனிடம் சொன்னாள்: நாம மறுபடியும் சந்திக்கணும்.
நிச்சயமா, பையன் சொன்னான்: லஞ்சுக்கு தேங்க்ஸ்.
சொல்லாதடா, என அவள் கண்களால் சொன்னாள். இத்தனை சீக்கிரமா இந்த சந்திப்பு முடிஞ்சது ஒரு டிராஜடிதான் என்று சொல்லி பையனுக்காக பிரத்யேகமாக அப்போதுதான் தயாரித்த சூடாறாத ஒரு புன்சிரிப்பை புன்சிரித்தாள்.
காரில் ஏறுகையில் பையன் ஹோட்டலின் வாசலில் நின்றிருந்த சர்தார்ஜியை பார்த்தான். சிங்கம் தளர்ந்துபோய் தூங்கிவிழுந்துகொண்டிருந்தது.
வண்டி கிளம்பியபோது ரேணு கேட்டாள்: எப்படியிருக்கா நீலிமா?
உன்னோட தோழியாச்சே? பையன் சொன்னான்: மோசமாயிருப்பாளா?
நீ ஒரு டைப்பான ஆள்டா, பையா!
ஏன், என்னாச்சு? உன் கவனமெல்லாம் அவமேலதான் இருந்தது. என்னைப் பாக்கவோ, இடையில ரெண்டு வார்த்தை பேசவோ உனக்கு நேரமில்ல.
கமான் பேபி! பையன் சொன்னான்.
அதுக்குள்ள நான் உனக்கு தந்த பிறந்தநாள் லஞ்ச்கூட உனக்கு மறந்திடுச்சு ,
பையன் சொன்னான்: என்னோட தப்புதான், மன்னிச்சுடு.
இங்க பாருடா பையா, அவள் சொன்னாள்: எனக்குத் தெரியாம நீ அவளை போன் பண்ணவோ பாக்கவோ செஞ்சே...
என்ன நடக்குமாம்?
உன்னை நான் கொன்னுடுவேன்!
ஸ்டியரிங் வீலை விரல்களுக்கிடையில் நெரித்தபடி முன்னாலிருந்த பாதையை வெறித்தபடி அவள் சொன்னாள்.
பையன் தன் கழுத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டு சொன்னான்: பைத்தியம்டி உனக்கு.
என் பைத்தியத்துக்கு நான் வைத்தியம் பாத்துக்கறேன். அவள் சொன்னாள்: ஆனா, இன்னையிலிருந்து நீ கண்காணிக்கப்படறே.
போடீ!
ஆப்பீசின் பிரவேச துவாரத்தில் கார் நின்றது.
பையன் இறங்கையில் அவள் கேட்டாள்: நீ சாயந்தரம் எத்தனை மணிக்கு திரும்பி வருவே?
ஏழு மணிக்கு. நீ?
அதுக்கு முன்னாடியே வந்துடுவேன்.
பை!
பாருடா பையா, நாம இன்னிக்கு கொஞ்சம் கோன்யாக் ப்ராண்டி சாப்பிடலாம். ஓகே?
இதை இவ்ளோ மெதுவாவா சொல்றது? பையன் கூவினான்: பெண்சிங்கம்டீ நீ!
பை!
கார் திரும்பிப் போவதைப் பார்த்தபடி பையன் நின்றான். குடிலின் வடிவமான அந்த க்ரீம்நிறசிறிய வாகனம் வளைவு திரும்பிக் கொண்டிருந்தபோது பையன் தலையில் கைவைத்து உள்ளுக்குள் அலறினான்:
கொன்னுடுங்கடி கூனிகளா, என்னைக் கொன்னுடுங்க
------------------------------




4. திக்விஜயம்

அமெரிக்காவில் ஸிராக்யூஸ் நகரத்தில் நடந்த புத்தக செமினாரில் இந்தியாவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட இரண்டு பிரபலங்கள்:
இட்டூப்பு முதலாளியும் பையனும்.
ஆங்கிலத்தை சரளமாகக் கையாள முடியும் என்கிற குறைபாடு பையனுக்கு இருந்தது. கருவூலத்தில் கிட்டத்தட்ட இருபது இங்கிலீஷ் சொற்களை மூலதனமாக வைத்திருக்கும் இட்டூப்புக்கு எதுவும் பிரச்னையேயில்லை. கருத்துப் பரிமாற்றம் சுலபமாக நடந்தது. அவர் எங்கேயும் பிரகாசித்தார். தனித்துத் தெரிந்தார். கமிட்டிக் கூட்டங்களிலும் குழு விவாதங்களிலும் ஆராய்ச்சிக் குழுவிலும் பிரசங்க மேடையிலும் கலக்கித் தள்ளினார். தலைவரின் வாய்ச்சாதுர்யத்துக்கு முன்னால் செமினார் பலமுறைஸ்தம்பித்து நின்றது.
என்ஜாய் என்கிற புதிய பதத்தையே அவர் அமெரிக்காவுக்குக் கொண்டு போயிருந்தார்.
புத்தக விற்பனையின் டெக்னிக்குகளை விவாதிக்கிற செஷனில் பேச இந்தியப் பிரதிநிதிகளை சேர்மேன் அழைத்தார். இட்டூப்பு ரகசியமாகப் பையனிடம் கேட்டார்:
நீ பேசறியாடா?
பையன் சொன்னான்: வேண்டாம்.
இட்டூப்பு எழுந்தார்.
மி வாண்ட் ஸ்பீக். (நான் பேச விரும்புகிறேன்.)
உலகெங்குமிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் இந்தியக் கதாபாத்திரத்தை ஆர்வமாய்ப் பார்த்தார்கள். இட்டூப்பு வெள்ளமாகப் பிரசங்கித்தார்:
சேல்ஸ்-பெஸ்ட்-லைப்ரரி சீசன்-ஸ்கூல் சீசன்-ஃபிஃப்டி கமிஷன்-சேல் அன்ட் என்ஜாய்.
ஆழமான இந்தச் சொற்பொழிவின் பொருளை ஓரளவு இவ்வாறு தொகுக்கலாம்:
புத்தகம் விற்பதற்கு சிறந்த காலம் லைப்ரரிக்காரர்கள் மார்க்கெட்டுக்கு வருகிற சீசனும், பள்ளிகள் திறக்கும் காலமும்தான். இந்தக் காலத்தில் கொஞ்சமும் நேரத்தை வீணாக்காமல் பரபரப்பாய் விற்று லாபம் சம்பாதியுங்கள். ஐம்பது சதவீதம்கூட கமிஷன் கொடுக்கலாம். (குறிப்பு: என்ஜாய் என்றவார்த்தை இங்கே லாபம் என்று பொருள்படும்.)
இட்டூப்பு வார்த்தைகளை நேராகவும் தலைகீழாய்த் திருப்பியும் பிரயோகித்தார். புத்தகத்தை உயர்த்திக் காண்பித்தார். விற்பதைப் போல் அபிநயம் பிடித்தார். காசு வாங்கி பாக்கெட்டில் போடுகிற விதத்தையும் காண்பித்தார். சொற்பொழிவு முடிந்தபோது அரங்கில் கரகோஷம்.
இட்டூப்பு பையனிடம் கேட்டார்: எப்டிடா இருந்துச்சு?
பையன் சொன்னான்: நீ கலக்கிட்டே.
அப்ப நீ ஏறிப் பேசீருக்க வேண்டீதுதானேடா?
பையன் சொன்னான்: நீ இருக்கும்போது நான் சோபிக்க மாட்டேன்.
மாலை நேர செஷன் முடிந்தபோது செமினாரே பிரவாகமாக வந்து இட்டூப்பை மூடியது. மஹாராஜாக்களுடைய, மணிநாகங்களுடைய, அரைகுறை ஆங்கிலம் பேசுபவர்களின் நாடான இந்தியாவிலிருந்து வந்த இட்டூப்பை அவர்கள் வாரியெடுத்துக் கொண்டார்கள்.
அவருடைய கையைக் குலக்கி, தோளில் தட்டி, கையெழுத்து வாங்கினார்கள். டின்னருக்கும் லஞ்சுக்கும் காக்டெய்லுக்கும் அவரை அழைத்தார்கள். அல்லோ, அல்லோ என்றும் என்ஜாய் என்ஜாய் என்றும் இட்டூப்பு கூவினார்.
(இங்கே அல்லோ (ஹலோ) என்பதற்கு சந்தோஷம் என்பதும் என்ஜாய் என்பதற்கு அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்பதும் பதவுரை.)
டி.எஸ். எலியட்டின் கவிதைகளைப் பற்றி டைம்ஸ் லிட்டரரி சப்ளிமென்டில் கட்டுரை எழுதிய பையன் இந்த நேரம் முழுவதும் ஃபோயரின் ஒரு மூலையில் சப்ளீஸாக நின்றுகொண்டிருந்தான்.
கூட்டம் கலையத் துவங்கியபோது இட்டூப்பு பையனைத் தேடி வந்தார்.
நீயேண்டா மூலையில வந்து நிக்கறே?
பையன் சொன்னான்: ஒண்ணுமில்ல.
ஒன் மூஞ்சியேண்டா சோந்துபோயிருக்கு?
பசிக்குது.
இட்டூப்பு சொன்னார்: வாடா. ம்ம ஓட்டலுக்குப் போயி கொஞ்சம் கஷாயமும் எறச்சியும் அடிக்கலாம்.
பையன் எதிர்ப்பைத் தெரிவித்தான்: அதெப்படி? ஏழு மணிக்கு ஹவாய் ஹோட்டல்ல காக்டெய்லுக்கு வர்றதா பஹாமாஸ் க்ரூப்கிட்ட நீ சொன்னதை கேட்டேனே?
இட்டூப்பு சொன்னார்: டே, நீ, இங்கிலிசு பேசி இங்கயே கெட ஏன்? இவனுக கூட குடிச்சா நம்முளுக்கெல்லாம் என்னடா ஏறும்?
அப்ப நீ போகலியா?
இட்டூப்பு பையனின் கையைப் பிடித்து இழுத்தார்: நீயி வாடா. ம்ம ஓட்டலுக்குப் போலாம்.
வசந்த காலம். பனியும் கொடுங்குளிரும். இரவு விரைவாகவே வந்தது. அறையின் சாவிகளை வைத்திருந்த ஹோட்டல் பெண் குட்நைட் வெல்கம் எல்லாம் கூறியபடி சாவிகளை நீட்டினாள்.
இட்டூப்பு பையனிடம் கேட்டார்: குட்டி எப்டிடா?
பையன் சொன்னான்: சரக்கெல்லாம் இல்ல.
அவனின் அறிவுப்பு சரிதான். ஒரு சராசரி அமெரிக்கப் பெண். செம்பட்டை முடி. வெள்ளைத் தோல். தோலின் மேல் கறுப்புப் புள்ளிகள். மொத்தமாக அவளிடம் அனுகூலமாயிருந்தது அவளுடைய வயசு மட்டுமே. இருபது வசந்தங்களுக்கு மேல் போகாது. அப்படிப் போனால், பையன் நினைத்துக் கொண்டான்: அப்புறம் வசந்தங்களுக்கே அர்த்தமில்லை.
சாவியை வாங்கி எதிரில் லாபியிலிருந்த சோஃபாவில் அமர்ந்த பிறகு இட்டூப்பு கேட்டார்: ஒனக்கு குட்டிய பிடிக்கல, இல்லடா?
பையன் உணர்த்தினான்: அவ்வளவொண்ணும் நல்லாயில்ல.
இருந்தாலும், நம்முளுக்கு ஒராளு வேணுமில்லடா?
எதுக்கு?
குளுருதில்லடா?
என்ன குளிரு? ஏர் கண்டிஷன் செஞ்ச ஹோட்டல்ல மிதசீதோஷ்ண நிலைதானே?
இட்டூப்பு கோபித்தார்: டேய், நீயி சாகித்தியம் பேசினேன்னு வச்சுக்கோ! மித சீதோஷ்ணத்தில தனியாப் போத்திட்டுப் படுத்துக்கறதுக்காடா இம்மாந் தூரம் வந்திருக்கோம்?
வேறென்ன வேணும்?
குட்டிகிட்ட போயி கேளுடா.
பையன் சிரித்தான்: நீ கேட்டாலே போதும்.
இட்டூப்பு எழுந்தார்: ஒனக்கு தகிரியம் பத்தாதுடா, வா.
பாருக்குப் போனார்கள். இட்டூப்பு இரண்டு பேர்பன் விஸ்கியும் இரண்டு கிலோகிராம் பன்றியிறைச்சியும் அடித்தார். பையன் இரண்டு விஸ்கியும் ஐநூறு கிராம் வாத்துமுட்டையும்.
இட்டூப்பு கேட்டார்: கிளம்பலாமாடா?
மீண்டும் லாபியையே வந்தடைந்தார்கள்.
பையன் சொன்னான்: நீ போகாம இருந்தது சரியில்ல. பஹாமாக்காரங்க உன்னை எதிர்பார்த்து நின்னுட்டிருப்பாங்க.
சாவிக் கவுன்ட்டரிலிருந்த பெண்ணின் மேல் கவனத்தைத் திருப்பி இட்டூப்பு சொன்னார்: அதுககிட்டப் போயி வேலயப் பாக்கச் சொல்லுடா.
பையன் சொன்னான்: சரி, ரூமுக்குப் போலாம்.
இட்டூப்பு கேட்டார்: ஒன்னால கேக்க முடியுமாடா?
யாருகிட்ட?
அந்தக் குட்டிகிட்ட.
முடியாது.
இட்டூப்பு சொன்னார்: அப்டின்னா, நாங்களே கேட்டுக்கறோம்.
பையன் தடுத்தான்: வேண்டா, இட்டூப்பு!
போடா!
இட்டூப்பு கவுன்டரை நோக்கி நடந்தார். அந்தப் பெண் சிரித்தபடி முன்னால் வந்தபோது தொண்டையைக் கனைத்துக் கொண்டு கெஞ்சுகிற குரலில் சொன்னார்:
சிஸ்டர் - இந்தியா ஹாட் - அமெரிக்கா கோல்ட் - வாண்ட் கம்பெனி - ஐ பே - ரூம் 635 - யெஸ் - கம் - நோ - சாரி.
கீர்த்தனைமாலையின் பரிபாஷை:
சகோதரீ, இந்தியா சூடான தேசம். அமெரிக்காவோ குளிர் தேசம். எனக்கு துணை தேவைப்படுகிறது. பணம் தருகிறேன். என்னுடைய ரூம்நம்பர் 635. சம்மதமென்றால் வாருங்கள். இல்லையென்றால் மன்னித்து விடுங்கள்.
பையன் விழித்து நிற்கையில் அந்தப் பெண் கன்னங்களில் மத்தாப்பூ பூக்க சிரித்து நாக்குக்குள் இட்டு உருட்டி விழுங்கும் அமெரிக்கன் ஆங்கிலத்தில் கேட்டாள்:
வை வோன்ட் யூ கால் மி ஆஃப்டர் எய்ட், படீ?
இட்டூப்பு கெஞ்சும் குரலில் பையனிடம் கேட்டார்: என்னடா சொல்லுது குட்டீ?
பையன் சொன்னான்:
எட்டு மணிக்கப்புறம் அவளைக் கூப்டறதாம்.
இட்டூப்பு தலை வணங்கி அவளைத் தொழுதார். (நான் கூப்டறேன்.)
எட்டரை மணியளவில் பையன் தன் அறையில் மாலை நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தபோது டெலிபோன் ஒலித்தது. இட்டூப்பு!
டேய்...
என்ன?
குட்டி வந்திருக்குடா.
நல்லது.
வாடா.
நான் வரல.
உனக்கு வேண்டாமா?
வேண்டா.
ஏண்டா?
பையன் சொன்னான்:
பொறாமை.
------------------------------------------------------------

About Me

Professionally a graphics designer (press and web). Writer in Tamil and Malayalam, Translator, Lyricist, Artist.